’பலவீனமான முதல்வரை தேர்வு செய்யவே மேலிடம் விரும்புகிறது’ நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்திருக்கும் கருத்து யாரைச் சுட்டுகிறது என்ற விவாதம் பஞ்சாப்பில் சூடுபிடித்திருக்கிறது.
வரும் பிப்.20 சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருக்கிறது. பலமுனைப் போட்டிகள் காரணமாக, ஆளும்கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் வியூகத்தில் சில மாற்றங்களை கொண்டுவருகிறது. அவற்றில் ஒன்றாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவும் முடிவு செய்திருக்கிறது.
முன்னதாக முதல்வர் முகமின்றியே, காங்கிரஸ் கட்சியை பிரதானப்படுத்தி தேர்தலை சந்திக்க முடிவு எட்டப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சி தங்கள் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்குகள் சேகரிக்கும் வேகத்தை பார்த்ததும், காங்கிரஸ் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டது. அதன்படி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை ஞாயிறு அன்று அறிவிக்க உள்ளார்கள்.
இதற்கிடையே, தற்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சரண்ஜீத் சிங்கையே, வரும் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் அடிபடுகின்றன. இதன் காரணமாகவே, மத்திய அரசின் அமலாக்கத்துறையினர், முதல்வர் சரண்ஜீத் சிங்கின் உறவினர் மீது நேற்று(பிப்.4) விசாரணை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்டனர் என்று காங்கிரஸ் வட்டாரம் கூறுகிறது.
முதல்வர் வேட்பாளர் பரிசீலனையில் தன்னையும் முன்னிறுத்த அழுத்தம் தந்துவந்த நவ்ஜோத் சிங் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாய், ‘பலவீனமான முதல்வரை தேர்வு செய்யவே மேலிடம் விரும்புகிறது’ என்று பொதுமேடையில் புலம்பியிருக்கிறார் என்கிறார்கள். இதன் மூலம் தனது ஆதங்கம் மற்றும் ஆட்சேபத்தை, கட்சித் தலைமைக்கும் உணர்த்தவும், அவர்களின் முடிவை மாற்றவும் சித்து முயல்கிறார் என்கிறார்கள்.
ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக சித்துவின் கருத்து சொல்வதை, பஞ்சாப் காங்கிரஸார் மறுத்து வருகின்றனர். சித்து குறிப்பிட்டது, பாஜகவை என்றும் அவர்கள் சமாளித்து வருகின்றனர். இதனிடையே சித்து அளித்துவரும் அழுத்தங்களுக்கு அப்பால், மேலிடத்தின் முதல்வர் தேர்வு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பஞ்சாப்பில் எகிறிக் கிடக்கிறது.