மதுரை சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கத்தின் மார்பளவு சிலை திறப்பு

By KU BUREAU

மதுரை: திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகருமான டி.ஆர்.மகாலிங்கத்தின் மார்பளவு சிலை, அவரதுசொந்த ஊரான மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரையில் நேற்று திறக்கப்பட்டது.

டி.ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா மதுரை தென்கரையில் உள்ள டிஆர்எம்.சுகுமார்பவனத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழாவை பின்னணிப் பாடகி பி.சுசிலா நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதையொட்டி, நாகஸ்வர, தவில் இசைக்கலைஞர் வலையபட்டி சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் டி.ஆர்.மகாலிங்கம் - கோமதி மகாலிங்கம் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர். மகாலிங்கத்தின் மார்பளவுச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, உயர் நீதிமன்ற மூத்தவழக்கறிஞர் டி.கே.கோபாலன் தலைமை வகித்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம், எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் நடிகர் ராஜேஷ் முன் னிலை வகித்தனர். டி.ஆர்.மகாலிங்கத்தின் பேரன் ராஜேஷ் மகாலிங்கம் வரவேற்றார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.ஆர்.மகாலிங்கத்தின் மார்பளவு சிலையைத் திறந்துவைத்தார். விழாவில் நடிகர்கள் செந்தில், அண்ணாதுரை கண்ணதாசன், இயக்குநர் சந்தானபாரதி, நடிகை சச்சு உட்பட பலர் பங்கேற்றனர். மாலையில் டிஆர்எம்எஸ் சென்னை கிளாசிக் இசைக்குழுவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. வெண்ணிற ஆடை நிர்மலாவின் நாட்டிய நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பரங் குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் திரைப்பட நடிகர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அப்துல் கலாம்அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஹரி, காந்த் ஆகியோர் நன்றி கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE