நகைக்கடன் தள்ளுபடி தகுதியுள்ளோர், தகுதியற்றோர் பட்டியலை தயாரிக்க குழு!

By காமதேனு

நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதியுள்ள, தகுதியற்ற நபர்களை அடையாளம் கண்டு, பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கூறியிருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நகைக்கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான ஆய்வின்போது, போலி நகைகளை வைத்து, நகைக் கடன் பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்தன. போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்கள், பல சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் என தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டனர். சில கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் வேதனையுடன் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி உடையவர்கள் யார் போலி நகைக்கடன் பெற்றவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்க துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு தயாரிக்கும் பட்டியலின் அடிப்படையில், அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE