பிறர் இன்பத்தில் மகிழும் மனநிலை ஏற்பட உறுதியேற்போம்: முதல்வர், அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

By KU BUREAU

சென்னை: பக்ரீத் திருநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறிஆகியவற்றைப் பின்பற்றி வாழும்இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள். அன்றாடவாழ்வில் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாக அமைந்திருக்கும் நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகள்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இறை தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என பக்ரீத் திருநாளில் உறுதி ஏற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வரும்இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ஒற்றுமையே உயர்வு தரும் என்பதற்கேற்ப அனைவர் வாழ்விலும் ஒற்றுமை உணர்வு மேலோங்க வேண்டும். வளமும், நலமும் பெருக வேண்டும் என்ற விருப்பத்துடன் இஸ்லாமிய மக்கள்அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், சகோதரத்துவம், நல்லிணக்கம் மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம் என உறுதியேற்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வாழையடி வாழை எனஉறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் பக்ரீத் பண்டிகைநன்னாளில் உறுதி கொள்வோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: ஹஜ்ஜூ பெருநாள் என்னும் தியாகத் திருநாள், தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை என அழைக்கப்படுகிறது. இந்நாளில், அனைவரும் நல்லோராய் வாழ்ந்திடவும், அனைவரும் மனிதநேயத்துடன் சிறந்திடவும், ஒருவருக்கொருவர் உதவிடும் பண்பாடு வளர்ந்திடவும் வாழ்த்துவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பக்ரீத் பண்டிகையானது இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு ஆகிய முக்கிய அம்சங்களை உணர்த்துவதால் அதனை கடைபிடிப்போம்.

விசிக தலைவர் திருமாவளவன்: மனிதகுலத்தை நல்வழிப்படுத்து வதை நோக்கமாகக் கொண்டுள்ளஉண்மையான இறைநம்பிக் கையை போற்றும் பக்ரீத் பெருநாளில் இஸ்லாமிய மக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: சம்பாதிப்பதில் நான்கில் ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்து அதில் சந்தோஷத்தை பெறும் கோட்பாட்டை கொண்டுள்ள பக்ரீத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துகள்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தியாகத் திருநாளில் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர்இன்பத்தில் மகிழுறும் மனநிலைஏற்படவும் உறுதி எடுத்துக் கொள்வோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை கடைபிடிக்கும் அரசாக செயல்படுவதற்கும் பிரார்த்திப்போம்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ: பக்ரீத் பெருநாளில் அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம் தழைத்தோங்கி சாதி,மத வேறுபாடுகள் இன்றி ஒற்றுமை யுடன் வாழ உறுதியேற்போம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பக்ரீத் திருநாளில் சாதி, மத மற்றும் இனவேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத் துடனும் வாழ உறுதியேற்போம்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: இறைத் தூதர் காட்டிய வழியில் மதநல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: மனிதருக்கு மனிதர் சுய தேவைகளை குறைத்து, சிறு தியாகங்கள் செய்து, இனப் பாகுபாடுகளை அகற்றுதல் என்னும் நபிகள் நாயகத்தின் நன்னெறியை பின்பற்றி வாழ வேண்டும்.

வி.கே.சசிகலா: நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு துரோகங்கள் அழியட்டும்,உள்ளத்திருந்து பகைமை நீங்கட்டும், அனைவரும் ஒற்றுமையுட னும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஜெ.ஹாஜாகனி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE