கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கும் வகையில், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சோதனையில், ரூ.13 லட்சம் சொகுசு காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுதிலும் பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கும்வகையில், 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் முக்கியப் பகுதிகளில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் வழக்கம்போல் வாகன தணிக்கையில் இருந்தபோது, இரணியல் பகுதியில் சொகுசுகார் ஒன்று வந்தது. அதை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது, காரின் பின்புறம் டிக்கியில் ஒரு சூட்கேஸில் 13 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது. புதிதாக இடம் வாங்குவதற்காக பணத்தைக் கொண்டு செல்வதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் கையில் இல்லை.
இதனால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, தேர்தல் முடிந்ததும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதேபோல் நாகர்கோவில் மாநகர சாலைகள், சுசீந்திரம், மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை என முக்கிய சாலைகள் அனைத்திலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.