தேர்தலில் களமிறங்கும் கணவன்மார்கள், மனைவிமார்கள்!

By காமதேனு

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் கணவன், மனைவியர் ஒரே வார்டுகளிலும், அடுத்தடுத்த வார்டுகளிலும் போட்டியிடுவதால் யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புறத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட இன்றே வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். பல வார்டுகளில் கணவன், மனைவியர் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வாலாஜாபாத்-காஞ்சிபுரம் அ.தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலராக பதவி வரும் ஹரிக்குமார், வாலாஜாபாத் பேரூராட்சியில் 14-வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மனைவி கீதாதேவி, 12-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி 15-வது வார்டில் அய்யனாரப்பன் மனைவி புவனேஸ்வரி என்பவரும், அவரது மகள் சம்யுக்தாவும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் நகராட்சியில் உள்ள 2-வது வார்டில் திமுக சார்பாக நகரச் செயலாளர் கே.குமாரும், 17-வது வார்டில் அவரது மனைவி கே.மலர்விழியும் போட்டியிடுகின்றனர்.

நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் வி.இராஜதேவனும், 23-வது வார்டில் அவரது மனைவி ஹேமலதாவும் போட்டியிடுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளராக இருந்த சுரேஷ் என்பவருக்கு தற்போது சீட் தராத காரணத்தால், சுயேச்சையாக போட்டியிட முடிவு எடுத்தார். பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 20-வது வார்டில் சுரேஷும், அவரது மனைவி இளமதியும் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம், சடையபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு செம்பேகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமியும், அவரது மனைவி லட்சுமி, மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன், அவரது மனைவி செல்வராணி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர்.

வேட்புமனு பரிசீலனைக்குப் பின்னர் சிலம்பரசன், செல்வராணி வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி, பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் தேர்தல் களத்தில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 14-வது வார்டில் வேட்பாளர் ஜெயராமும், அவருடைய மனைவி பாக்கியலட்சுமி 15-வது வார்டிலும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE