#GetOutRavi ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்!

By காமதேனு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி வைத்திருந்த நிலையில், #GetOutRavi ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நாடு முழுதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் என்னும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, இந்தத் தேர்வை தமிழகத்தில் வரவிடாமல் தடுத்தனர். காரணம், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கனவை இழந்துவிடுவார்கள் என்று கூறி அதற்கு அவர்கள் தடைபோட்டனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு நீட் தேர்வை அனுமதித்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனாலும், தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு மூலம்தான் மருத்துவப் படிப்பு சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி புதிய சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

இந்நிலையில் கடந்த 4 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு குறித்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த முடிவு தமிழக மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள், நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆசூளுநரின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் #StateRights #BANNEET, #GoBack_TNGovernor போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE