நீட் மசோதா மீது தமிழக ஆளுநர் எடுத்த திடீர் முடிவு; மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியதன் எதிரொலி?

By ஆர். ஷபிமுன்னா

தமிழக அரசின் நீட் மசோதா மீது தமிழக ஆளுநர் இன்று திடீர் என முடிவு எடுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு மக்களவையில் திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியதன் எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி, டி.ஆர்.பாலு இன்று உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவர் பேசியதாவது:

“நீட்' எனப்படும் தேசிய அளவிலான போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக மாணவர்களை பொறுத்தவரை இது பெரும் பாதகமான ஒன்றாகும். இதனால், 30-க்கும் மேற்பட்ட மாணவத் தளிர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். நீட் தேர்வு, அவர்களது மருத்துவக் கல்லூரிக் கனவுக்கு குந்தகம் விளைவிப்பதால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

இதில் என்னதான் பிரச்சினை? என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. நீட் தேர்வுக்கான கேள்விகள் சிபிஎஸ்சி பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்படுகின்றன. அதற்கு மாறாக, தமிழக மாணவர்கள் 12-ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் பயில்கின்றனர். இரண்டு பாடத்திட்டத்துக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழக்கின்றனர். இறுதியாக மருத்துவப் படிப்புக்குச் செல்ல முடியாமல் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அரசு அமைந்தபின் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி இந்த விஷயம் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 80,000-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றுள்ளது. இந்த மனுக்களை எல்லாம் தீர ஆய்வுசெய்த பிறகு, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, 'நீட்' தேர்வு முறை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அதை அறிவுரையாக தமிழ்நாடு அரசுக்கு தந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினார். அந்தக் கூட்டத்திலே நீட் தேர்வை நிராகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீட் தேர்வு முறையிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க சட்டம் ஒன்று தமிழ்நாடு சட்டபேரவையில் 13.9.2021 அன்று இயற்றப்பட்டது. அந்தச் சட்டம் 18.9.2021 அன்று தமிழக ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநரின் பரிந்துரையுடன், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? கடந்த 5 மாதங்களாக ஆளுநர் அந்தச் சட்டத்தின் மீது ஒப்புதல் தராமல் அமர்ந்துள்ளார். ஆளுநர் எப்படி இதுபோல் ஒப்புதல் தராமல் வாளாவிருக்க முடியும்?

அரசியலமைப்புச் சட்டம், பிரிவுகள்- 200, 201-ன்படி இந்தச் சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். பிரிவு- 254-ன்படி குடியரசுத் தலைவர் இதன் மீது உரிய முடிவை எடுத்து, மாநில அரசுக்கு அதைத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், இவையெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

முதலில் எங்கள் தலைவர், இது தொடர்பாக எங்களது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சரை நேரில் அனுப்பி ஒப்புதல் வேண்டி ஆளுநரிடம் வேண்டுகோள் வைத்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பின்னால் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தானே நேரில் சென்று இது தொடர்பாக ஆளுநரை சந்தித்தார். ஆனால், ஆளுநரோ எதுவும் கூறவில்லை.

பின்னர், தமிழகத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பாக முதல்வர் வேண்டுகோள் வைத்தார். அதன்படி நாங்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கச் சென்றோம். ஆனால், குடியரசுத் தலைவர் நலமாக இல்லை என்ற காரணத்தால் அந்த மனுவை அவரது அலுவலகத்திலே அளித்துவிட்டுத் திரும்பினோம். அதற்குப் பின்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களை, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று சந்தித்து தமிழக அரசின் சட்டம் தொடர்பாக, 20 நிமிடங்களுக்கும் மேலாக எடுத்துரைத்து வேண்டுகோள் வைத்தோம்.

உரிய முறையிலே எங்களது வேண்டுகோளைக் கேட்டறிந்த உள்துறை அமைச்சர், ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மனிதவளங்கள் அமைச்சகங்களுடன் கலந்துபேசி விரைவில் இது விஷயமாக உரிய முடிவெடுப்போம் என்றார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. எனவேதான், இந்தப் பிரச்சினையை நான் எழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். குடியரசுத் தலைவர் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகக் குறுக்கிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுட்டிக்காட்டுவதிலே எனக்கு வருத்தமாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாகவும், 30-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த தியாகத்தின் சார்பாகவும் நான் குடியரசுத் தலைவர் உரையாற்றும் பொழுது எழுந்து நின்று அவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தேன்.

குடியரசுத் தலைவர் இதில் தலையிட வேண்டும் என்பதை வலியறுத்த எனக்கு இதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. இருப்பினும், நீட் தேர்வு விவகாரத்தில் இன்றைய தேதிவரை எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசின் சட்டத்துக்கான ஒப்புதல் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அரசு ஒரு மெத்தனமான மனோபாவத்தை கடைபிடிக்கிறது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE