கடந்த 2014-ல் தேர்தலின்போது ரூ.15 லட்சம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்னவானது என, மக்களவையில் திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியான டி.ஆர்.பாலு இன்று உரை நிகழ்த்தினார். குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவர் பேசியதாவது:
“ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூபாய் 15 லட்சம் தருவேன் எனப் பிரதமர் கூறினார். ஆனால், தேர்தல் நேரத்தில் அளித்த அந்த வாக்குறுதியை, பிரதமரான பிறகு அவர் நிறைவேற்றவில்லை. இன்றுவரை அவர் தருவதாக வாக்குறுதி அளித்த ரூபாய் 15 லட்சம் யாருக்கும் கிடைக்கவில்லை.
அதேநேரம் ஒவ்வொரு ஆண்டும், 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றும் அவர் தேர்தல் வாக்குறுதியிலே குறிப்பிட்டிருந்தார். இதைக் கூறி இன்றோடு ஏழரை ஆண்டுகள் முடிந்துள்ளன. இதன் பின்னரும் பதினைந்து கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பிரதமர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை நாம் மறந்துவிட முடியாது.
அதுமட்டுமல்ல இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கு விரைவாக குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்று பிரதமர் அவர்கள் இந்த அவையிலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் தந்த வாக்குறுதியையும் நாங்கள் மறக்க முடியாது. டெல்லி மாநகரின் எல்லையிலே லட்சோபலட்சம் விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்து நீங்களெல்லாம் திரும்பவும் உங்கள் மாநிலங்களுக்குச் சென்று உங்கள் ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் இருங்கள் என்றார் பிரதமர். அவர்களது தேவைகளை தான் பார்த்துக் கொள்வதாகவும் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கும் மேலாக வருத்தத்துடன் இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
63 சதவிகிதம் வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால், 37.36 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றவர்கள் இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். மாறாக 63 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம். இது மிகவும் வருத்தமளிக்கிறது. இது நமது ஜனநாயக அமைப்பின் முரண்பாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.