சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவுசெய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், பிப்ரவரி 5-ல் நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்த அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்” என்று எழுதியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நோக்கில், #StandForStateRights எனும் ஹேஷ்டேகுடன் இந்த ட்வீட்டை அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதற்கிடையே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை 4 மாதங்கள் வைத்திருந்து, மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. ட்விட்டரில் #GetOutRavi எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகியிருக்கிறது.