மதுரை மாநகராட்சி தேர்தல்: செல்லூர் கே.ராஜூ மறுத்த வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஓகே!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி தேர்தலில், செல்லூர் கே.ராஜூ ‘சீட்’ மறுத்த ஓபிஸ் ஆதரவாளரும் முன்னாள் மண்டலத் தலைவருமான சாலை முத்துவுக்கு மீண்டும் அதிமுகவில் ‘சீட்’ வழங்கப்பட்டிருக்கிறது. அவர் நேற்று ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மாநகராட்சி தேர்தலில், அதிமுக போட்டியிடும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை கட்சித் தலைமை கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தது. இதில், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியும் முன்னாள் மண்டலத் தலைவருமான சாலை முத்து, முன்னாள் கவுன்சிலர் கண்ணகி பாஸ்கரன், முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி, கவுன்சிலர் ராஜா சீனிவாசன் உள்ளிட்ட பலருக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டது. மாநகரச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ அனுப்பிய பட்டியலையே கட்சித் தலைமை அறிவித்ததால், ‘சீட்’ கிடைக்காதவர்கள் அதிருப்தியடைந்தனர்.

அவர்கள், கட்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லூர் கே.ராஜூ தங்களுக்கு ‘சீட்’ வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினர். அதிருப்தியடைந்த அவர்கள், சென்னை சென்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சிடம் முறையிட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமியை அவர்களால் பார்க்க முடியவில்லை.

‘சீட்’ மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் சாலை முத்து. கடந்த அதிமுக மாநகராட்சி நிர்வாகத்தில் தெற்கு மண்டலத் தலைவராக இருந்தார். 3 முறை கவுன்சிலராக வெற்றி பெற்றவர். 2011-ம் ஆண்டு தேர்தலில் மேற்கு தொகுதியில் போட்டியிட சாலை முத்துவுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது. அதன்பிறகு திடீரென்று இந்தத் தொகுதியில் சாலைமுத்துவை மாற்றவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது. ஒருமுறை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அதிமுகவில் சேருவதற்கு முன் சாலைமுத்து 1978-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலரானார். அதன்பின் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ்சுடன் சேர்ந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாநகரில் எம்எல்ஏ ‘சீட்’ கேட்டார். செல்லூர் கே.ராஜூவை மீறி இவரால் ‘சீட்’ வாங்க முடியவில்லை. அப்போது ஓபிஎஸ் மாநகராட்சி தேர்தல் வரும்போது கவுன்சிலர் ‘சீட்’ வழங்கி முக்கிய பொறுப்பு தருவதாக உறுதியளித்திருந்தார்.

தற்போது செல்லூர் ராஜூ மீது முத்து வாசித்த புகார்களை கவனமாகக் கேட்டுக்கொண்ட கட்சித் தலைமை, சாலைமுத்துவை பழங்காநத்தம் 74-வது வார்டில் போட்டியிட ‘சீட்’ வழங்கியுள்ளது. மாநகரச் செயலாளர் செல்லூர் கே.ராஜூவை மீறி சாலைமுத்து ‘சீட்’ பெற்று வந்துவிட்டதால், ராஜூ தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று சாலைமுத்து 74-வது வார்டில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE