கட்சி மாறினால் வெட்டுவேன் என மிரட்டியவர் மீது 3 வழக்குகள்

By கே.எஸ்.கிருத்திக்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, “உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின், யாராவது கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன். அவர்கள் போஸ்ட்மார்ட்டம் ஜிஹெச்சில்தான் நடைபெறும். மாவட்டச் செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன்” என்றார்.

அவரது அந்தப் பேச்சை, கூட்டத்துக்கு வந்தவர்களில் ஒருவரே பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அடுத்த நிமிடமே அது வைரலானது. கண்டனங்களும் குவிந்தன.

இதைத் தொடர்ந்து சாத்தூர் போலீஸார், சண்முகக்கனி மீது கொலை மிரட்டல் 506 (1), ஆயுதங்களைப் பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசுவது 505 (1பி), இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியது 153 (ஏ) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நல்லவேளையாக இந்தக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்கவில்லை. இல்லை என்றால், மாவட்டச் செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன் என்று சொன்னதற்காக, அவர் மீதும் ஒரு வழக்கைப் போட்டிருப்பார்கள் போலீஸார் என்று வேடிக்கையாகப் பேசிக்கொள்கிறார்கள் அதிமுகவினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE