பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் யார் எனும் கேள்வி தொடர்ந்து நீடித்துவருகிறது. தற்போதைய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியை முன்னிறுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாகச் செய்திகள் வெளியாகின. கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரும் அடிபடுகிறது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) லூதியானாவுக்குச் செல்லும் ராகுல், இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
‘பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்?’ என மக்களிடமே கருத்து கேட்டு முடிவுசெய்யவிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது. இதற்காகப் பிரத்யேகமாக அலைபேசி எண்ணையும் அக்கட்சி வெளியிடும் எனத் தெரிகிறது.
ஆம் ஆத்மி கட்சி தனது முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானைத் தேர்ந்தெடுத்தபோதும், இப்படி அலைபேசி எண் மூலம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதாகச் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.