சென்னை மாநகராட்சியில் திமுக, கூட்டணி கட்சிகள் எத்தனை வார்டுகளில் போட்டி?

By காமதேனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட உள்ள வார்டுகள் எண்ணிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வார்டுகளில் எண்ணிக்கை விவரம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடப்பங்கீடு, கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் விரைவுபடுத்தியுள்ளன.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், 163 இடங்களில் திமுக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய 37 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 17, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1, மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 வார்டும் ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றன. அந்தவகையில், திமுக நேற்றிரவு 8-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த 8-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், மேட்டுப்பாளையம், சிதம்பரம் நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆவடி, கோவை, ஈரோடு, கடலூர் மாநகராட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE