“அனுமதி தர நீங்கள் யார்?” - ராகுலுக்கு வகுப்பெடுத்த ஓம் பிர்லா

By காமதேனு

நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி ஆற்றிய உரை பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதே உரையின்போது நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வகுப்பெடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

ராகுல் காந்தி தனது உரையில், “இந்தியா ஒரு முடியரசாக இருக்க முடியாது. அரசர் யாருக்கும் செவிமடுப்பதில்லை” என்று கோபாவேசமாகப் பேசினார். ராகுல் உரையாற்றுவதற்கு முன்னர், பாஜகவைச் சேர்ந்த பட்டியலினச் சமூக எம்.பி-யான கமலேஷ் பாஸ்வான் உரையாற்றியிருந்தார்.

ராகுல் காந்தி

பின்னர் தனது உரையின்போது மோடியைக் கடுமையாக விமர்சித்த ராகுல், “நீங்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. பாஜகவில் உள்ள சகோதர சகோதரிகளின் கருத்துகளுக்கும் செவிமடுப்பதில்லை. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த சக எம்.பி பாஸ்வான் ஜி பேசியதைக் கேட்டேன். அவருக்குப் பட்டியலினச் சமூகத்தின் வரலாறு தெரியும். 3,000 ஆண்டுகளாக அந்தச் சமூகத்தின் மீது ஒடுக்குமுறை நிகழ்த்தியவர்கள் யாரென்றும் அவருக்குத் தெரியும். அவரை நினைத்துப் பெருமையடைகிறேன். அவர் தனது இதயத்தில் இருந்ததை என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் தவறான கட்சியில் இருக்கிறார்” என்றார். பின்னர் அவரைப் பார்த்து, “கவலைப்பட வேண்டாம். பயப்படாதீர்கள்” என்றும் பேசினார்.

பாஜக எம்.பி கமலேஷ் பாஸ்வான்

இதையடுத்து அவையில் கூச்சல் எழுந்தது. உடனே கமலேஷ் பாஸ்வான் எழுந்து நின்று, பேசுவதற்குத் தன்னை அனுமதிக்குமாறு சபாநாயகரான ஓம் பிர்லாவிடம் கேட்டார். அதற்கு, “இல்லை... இடையில் பேச வேண்டாம். அப்புறமாகப் பேசலாம்” என்று ஓம் பிர்லா கூறினார். உடனே ராகுல், “நான் ஒரு ஜனநாயகவாதி. இன்னொருவர் பேசுவதற்கு அனுமதியளிப்பேன்” என்றார்.

இதனால் சற்று கோபமடைந்த ஓம் பிர்லா, “நீங்கள் யாருக்கும் அனுமதி வழங்க முடியாது. அது என்னுடைய உரிமை” என்று கூறினார்.

கமலேஷ் பாஸ்வான் பேசும்போது, “நான் தவறான கட்சியில் இருப்பதாக ராகுல் கூறினார். ஆனால், நான் பாஜகவில் இருப்பதால்தான் அவர் பேசிய பின்னர், பன்ஸ்காவ் தொகுதி (உத்தர பிரதேசம்) எம்.பி-யான என்னால் பேச முடிகிறது. என்னை என் கட்சி மூன்று முறை எம்.பி-யாக்கியிருக்கிறது. எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE