நானும் ஒரு தமிழன்தான்- மக்களவையில் ஒலித்த ராகுல் காந்தியின் குரல்

By காமதேனு

மக்களவையில் தமிழகம், தமிழ்நாட்டு மக்கள் குறித்து பலமுறை பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "நானும் ஒரு தமிழன் தான்" என்று பதிலளித்தார்.

மக்களவையில் நேற்றிரவு குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில், "இந்தியா என்பது மாநிலங்களுடன் இணைந்த ஒன்றியம் ஆகும். இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது. நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்தியாவை ஒரு அரசால் ஆட்சி செய்ய முடியாது. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது.

உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது" என்று ஆவேசமாக பேசினார்.

மக்களவையில் உரையாற்றிய பின்னர் ராகுல் காந்தியிடம், தமிழகம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பலமுறை பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு ராகுல் காந்தி 'நானும் ஒரு தமிழன் தான்' என்று பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE