இது முடியாட்சி அல்ல, குடியாட்சிக் கோமான்களே!

By கே.எஸ்.கிருத்திக்

எழுத்தாளர், பதிப்பாளர், தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதனின் முகநூல் பதிவு:

அண்ணாவையே நினைவேந்தினார் ராகுல். இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். அவருக்கு நாம் நினைவேந்தலைச் செலுத்தும் இத்தருணத்தில், வேறு ஒருவர் ஒருநாள் முன்னதாகவே அதைச் செலுத்திவிட்டார் என்று தோன்றுகிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியப் பேச்சைக் கேட்டேன். அவர் எப்போது திமுகவில் சேர்ந்தார்? எந்த நாடாளுமன்றத்தில் அண்ணாவின் கூக்குரலுக்கு செவிமடுக்காமல், அவரது அறிவுரையைக் கேட்காமல், அவரது எதிர்கால நோக்கை அறியாமல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பிற காங்கிரஸ், ஜனசங்க, கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவரைப் புறக்கணித்தார்களோ, அலட்சியப்படுத்தினார்களோ, தோற்கடித்தார்களோ, அதே நாடாளுமன்றத்தில், அதே ஜவஹர்லாலின் வாரிசு, ராகுல் காந்தி நேற்று பேசியதெல்லாம், அண்ணா அன்று சொன்னதை இன்று வழிமொழிந்ததுதான்.

அண்ணாதான் சொன்னார்.. “சாம்ராஜ்யங்களால் எங்களை ஆளமுடியாது” என்று அண்ணாதான் சொன்னார். “தில்லியிலிருந்து ஒருபோதும் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களை உங்களால் ஆளவே முடியாது” என்று அண்ணாதான் சொன்னார். எதை 'ஐடியா ஆஃப் இந்தியா', 'ஐடியா ஆஃப் தமிழ்நாடு' என்று நேற்று ராகுல் சொன்னாரோ அதை வேறு சொற்களில் அண்ணா நாடாளுமன்றத்தில் சொல்லவே செய்தார். இந்தியா ஒரு கூட்டமைப்புதான் என்பதையும் 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்பதையும் அவர் எப்போதுமே வலியுறுத்தினார்.

மாநிலங்களின் உரிமைகளை மறுக்கும் ஷா இன்ஷாக்களை - பேரரசர்களை - அன்றே அவர் விமர்சித்தார். “இது முடியாட்சி அல்ல, குடியாட்சிக் கோமான்களே” என்று அண்ணாதான் சொன்னார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என அவர்தான் சொன்னார். இறையாண்மை உங்களுக்கு உள்ள அதே அளவுக்கு எங்களுக்கும் இருக்கிறது என்றும் அண்ணாதான் சொன்னார். இந்தியாவுக்குள் பன்முகமாகவும் சீனாவோ வேறு எந்த நாடோ எதிர்வந்தால், ஒன்றுபட்டு ஒருமுகமாகவும் நாம் இருந்தாகவேண்டும் என்பதையும்கூட அண்ணாதான் சொன்னார். சொன்னதைச் செய்தும் காட்டினார்.

இந்தியா என்பது comity of nations ஆகவும் unity of hearts ஆகவும் இருக்கவேண்டும் என்றும் தில்லியால் ஆளப்படும் பிரதேசங்களாக அல்ல என்றும் அண்ணாதான் சொன்னார். எவ்வளவோ சொன்னார். அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.

உலக வரலாற்றையும் உள்ளூர் வரலாற்றையும் சுட்டிக்காட்டிச் சொன்னார். ஒருவர் மண்டையிலும் ஏறவில்லை. நேருவுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. பேரரசி இந்திராவுக்கும் இளவரசர் ராஜீவுக்கும் அது புரிந்ததே இல்லை. மொரார்ஜிகளுக்கும் வாஜ்பாய்களுக்கும் அதில் ஏற்பே இல்லை. பப்பு என்று இளக்காரமாக அழைக்கப்படும் ராகுலுக்குத்தான் இந்தியாவைப் புரிந்திருக்கிறது.

தன் குடும்பத்தின் சோக வரலாற்றிலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் அது. தில்லியின் புரிதலின்மையின் விளைவுகளை, நிராகரிப்புகளின் விளைவுகளை நன்கு அறிந்துகொண்டவராகத்தான் இன்று ராகுல் பேசுகிறார். அது உளமார்ந்த பேச்சு என்றே நம்புகிறேன். அல்லது நம்ப விரும்புகிறேன். சாம்ராஜ்யவாதிகளுக்குப் பிடிக்காதப் பேச்சுதான் என்றாலும் அதுதான் உண்மையான பேச்சு.

இன்று ராகுலைவிட, இந்தியாவை நன்கு புரிந்துகொண்டிருக்கும் ஒரு வடநாட்டுத் தலைவர், வேறு யாரும் இல்லை. (தென்னிந்தியாவில் ஸ்டாலின் இருக்கிறார்).ராகுலின் நேற்றைய பேச்சு உண்மையில் அண்ணாவுக்கு அவர் தன்னை அறியாமல் செலுத்திய அஞ்சலிதான். 1962,63 ஆண்டுகளில் மாநிலங்களவையில் அண்ணா பேசியவற்றையும் இன்று ராகுல் பேசியவற்றையும் இணைத்துப்பாருங்கள். அண்ணனின் தீர்க்கதரிசனம் புரியும்.

Carry on, but remember என்று அண்ணா எச்சரித்தார். ராகுல் அதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: Don't carry on, don't forget 3000 years Indian history என்று ராகுல் சொல்கிறார். மோடிஜி, நம்மால் மூவாயிரம் ஆண்டுகளாக இதைச் செய்யமுடியவில்லை. அசோகன் காலத்தில் குப்தர் காலத்தில் அதன் பிறகு என்றுமே நம்மால் இப்படி ஆளமுடிந்ததில்லை என்று நினைவுபடுத்துகிறார் ராகுல்.

சொர்க்கத்தில் இன்று அண்ணாவும் நேருவும் சந்தித்துக்கொள்ள நேரிட்டால், நேரு அண்ணாவைப் பார்க்கும்போது சற்று நாணப்படவே செய்வார். அல்லது, பெருமூச்சுவிடவும்கூடும். அண்ணாவை நினைத்துக்கொள்ளுங்கள் இன்று. அந்த அரக்கனின் எச்சரிக்கைகளையும் வியூகங்களையும் நினைத்துப்பாருங்கள் இன்று. நாடாளுமன்றத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைவிட எள்ளளவும் குறைவில்லாத வேறு ஒரு சம்பவமும் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

கிட்டத்தட்ட பாஜக தவிர்த்த அத்தனைக் கட்சிகளுக்கும் ஒரு முக்கியமான கடிதத்தை எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சமூக நீதிக்கான அனைத்திந்திய ஒருங்கிணைப்புக்கான இந்த முயற்சி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நேருவின் வாரிசும் அண்ணாவின் அரசியல் வாரிசும் ஒரே படைவரிசையிலிருந்து ஒரு புதிய யுத்தத்தைத் தொடங்குகிறார்கள். ஷா இன்ஷாக்களுக்கு எதிராக. முதல்வரின் சமூக நீதி கூட்டமைப்பு என்பதும் சாராம்சத்தில் கூட்டாட்சிக் கூட்டமைப்புக்காகத்தான். எதிர்க்கட்சித் தலைவர் நேற்று போராடியதும் இனங்களின் சமூகநீதிக்காகத்தான். அண்ணா புன்னகைப்பார் நிச்சயமாக.

Anna, you will never ever be defeated. They carried on then, they are remembering you now. In the halls of democracy in India, your voice is still reverbrating. The 'sullen discontent' you referred with half a century ago, is alive and kicking, seems resurfacing.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE