கோடை விடுமுறையில் மேட்டூர் அணை பூங்காவுக்கு 2 மாதங்களில் 2.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை: நுழைவுக் கட்டணமாக ரூ.13.36 லட்சம் வசூல்

By த.சக்திவேல்

மேட்டூர்: கோடை விடுமுறையின்போது, மேட்டூர் அணை பூங்காவுக்கு கடந்த 2 மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் 2.50 லட்சம் பேர் வந்து சென்றனர். இதன் மூலம் நுழைவுக் கட்டணமாக ரூ.13.36 லட்சம் வசூலானது.

சேலம் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் மேட்டூர் அணை பூங்கா முக்கியமானது. தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை வளாகத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்காவும் இருக்கிறது. இந்த பூங்காவுக்கு, சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

பக்ரீத் பண்டிகையை ஒட்டி அமைந்த தொடர் விடுமுறை காரணமாக, இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மேட்டூர் வந்திருந்தனர். அவர்களில் பலர், காவிரி ஆற்றில் புனித நீராடி, அணைகட்டு முனியப்ப சுவாமி கோயிலில், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு, பொங்கல் வைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர், சமைத்த உணவை மேட்டூர் பூங்காவுக்கு எடுத்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர்.

தொடர்ந்து, மேட்டூர் அணையின் அழகை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் அணை பூங்காவில் உள்ள மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை மற்றும் பவள விழா கோபுரம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். மேலும், குழந்தைகள் அங்குள்ள ஊஞ்சல், சீசா பலகை, சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக, ஏப்ரல், மே மாதங்களில் மேட்டூர் அணை பூங்காவுக்கு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர், அதன்படி, மேட்டூர் அணை பூங்காவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 94,354 பேரும், மே மாதத்தில் 1,40,291 பேரும் வந்தனர்.

அவர்களில் , மேட்டுர் அணை பவள விழா கோபுரத்தை ஏப்ரல் மாதத்தில் 5,509 பேரும், மே மாதத்தில் 10,529 பேரும் வந்தனர். ஒட்டுமொத்தமாக, மேட்டூர் அணை பூங்காவுக்கு 2,34,645 பேரும், பவள விழா கோபுரத்திற்கு 16,038 பேரும் என மொத்தமாக 2,50,683 சுற்றுலா பயணிகள் வந்தனர். இதன் மூலம் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர் அணை பூங்காவுக்கு, நுழைவு கட்டணமாக ரூ 11,73,225, பவள விழா கோபுரம் நுழைவுக் கட்டணமாக ரூ 1,63,695 என மொத்தமாக ரூ 13,36,920 வசூலானது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE