சென்னை: திருச்சி அருகே மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த இலுப்பூர் கோட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் இருவர் மீது லாரி ஏற்ற முயன்ற கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் கோரியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''கடந்த, வெள்ளிக்கிழமை இரவு திருச்சி அருகே அன்னவாசல் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக அப்பகுதி கோட்டாட்சியர் தெய்வநாயகிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே நேரில் சென்ற அவர் வளயப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே மணல் ஏற்றி வந்த லாரியை, விசாரணைக்காக நிறுத்த சைகை செய்தார். ஆனால், அந்த லாரி அவரது காரை மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் ஆர்.டி.ஓ தெய்வநாயகி, அவரின் உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் ஓட்டுநர் கனகராஜ் ஆகியோருடன் காயமின்றி தப்பினர். லாரியை இயக்கிய இருவரும் வாகனத்தை விட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்தர காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் காவனூரிப்பட்டியைச் சேர்ந்த கே.சுந்தரம் மற்றும் வி.சங்கர் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவது முதல் முறை அல்ல. எனவே இந்த வழக்கை கொலை முயற்சியாக பதிவு செய்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதுடன், மணல் கொள்ளை கும்பலை எதிர்கொள்ளச் செல்லும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் எனவும் சி.பிஎம் மாநில செயற்குழுவின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.'' இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
» “அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி வணங்கிட முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்” - ஆ.ராசா
» தாம்பரம் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: மட்டன் பிரியாணி விருந்து நடத்தி அசத்தல்