அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல: உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன்

மதுரை: அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் சரவணன். இவர் பொய்யான தகவல் அளித்து 1989-ல் கருணை அடிப்படையில் பணி பெற்றதாககூறி ஓய்வு பெறும் நாளான 31.10.2022-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து தன்னை முறைப்படி ஓய்வு பெற அனுமதித்து, பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சரவணன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், ‘மனுதாரர் பொய்யான தகவல் தெரிவித்து கருணை பணி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கவில்லை. மனுதாரரை பிடிக்காத 3ம் நபர்கள் அளித்த புகாரின் பேரில் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் பணிக்காலத்தை நிறைவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உண்மைகளை மறைத்து பணியில் சேர்ந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தவறானது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஓய்வு பெறும் வயது வரை அரசுக்கு சேவையாற்றிய அரசு ஊழியர்களின் மன உறுதியை பாதிக்கச் செய்யும். மனுதாரருக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை அனுமதிப்பது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அரசு ஊழியரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது அந்த ஊழியருக்கு மனவேதனையை அளிக்கும். 25 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு ஊழியரின் நலனுக்கு எதிராக அரசின் அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது. எனவே, மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது, குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியது சட்டவிரோதம். இரண்டும் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை ஓய்வு பெற அனுமதித்து அனைத்து பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும், என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE