மைக்கேல்பட்டி பள்ளிக்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை -விஜயசாந்தி

By கரு.முத்து

“தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்குச் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை, அதனால் அங்கு செல்லவில்லை” என்று பாஜக விசாரணைக் குழுவில் உள்ள நடிகை விஜயசாந்தி தெரிவித்தார்.

தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, அரியலூர் வடுகபாளையத்தில் உள்ள மாணவியின் இல்லத்துக்கு சென்று விசாரணை நடத்திய பின்னர், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு விசாரணை செய்வதற்காக வந்திருந்தது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்துப் பேசிய பாஜகவின் விசாரணை குழுவினர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். குழுவின் சார்பில் முன்னாள் எம்பி விஜயசாந்தி கூறியதாவது:

“மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்த விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். வழக்கு சிபிஐக்கு சென்றதால், அவர் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம்காட்டினார். இருப்பினும் முழுமையாக நாங்கள் கூறியதை கேட்டுக்கொண்டார். இறந்த மாணவியின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

மதமாற்ற தடைச் சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மாணவிக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும். மதமாற்றம் தொடர்பாக மட்டும் இல்லாமல் வேறு எந்த விஷயத்துக்காகவும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்வது தவறானது. எந்த விஷயமாக இருந்தாலும் மாணவிகள் தைரியமாக சந்திக்க வேண்டும்.

பெற்றோர் உங்கள் மீது எவ்வளவு ஆசை வைத்து இருப்பார்கள். நீங்கள் தற்கொலை செய்துகொண்டு இறப்பது ஒரு நிமிடத்தில் முடிந்தும்விடும். அதன் பின்னர் வாழ்வு முழுவதும் உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். வாழ்வில் போராட வேண்டும்.

மாணவி படித்த மைக்கேல்பட்டிக்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் அங்கு செல்லவில்லை.

தமிழக அரசு இந்த மாணவி விவகாரத்தில் ஏன் மவுனமாக உள்ளது என தெரியவில்லை. ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. மாணவியின் குடும்பத்துக்கு அரசு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இதுபோன்ற விஷயம் மற்ற மாணவிகளுக்கு நடக்காமல் இருக்க முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டாக திமுகவில் உள்ளார். கட்சிக்காரருக்கு இந்த நிலைமை வந்துள்ளது. ஆனால், முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்று கேள்வி எழுப்பிய விஜயசாந்தி, “விசாரணை அறிக்கையை விரைவில் ஜே.பி.நட்டாவிடம் அறிக்கையாக அளிப்போம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE