நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்

By கே.எஸ்.கிருத்திக்

வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய மிகச்சிறப்பான பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார். பட்ஜெட் முழுவதும் அனைத்துப் பிரிவினரும் வரவேற்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலான ஆக்கப்பூர்வமான, புதுமையான, புரட்சிகரமான திட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நிதி அமைச்சராக கடந்த 4 ஆண்டுகளில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் நாம் சுதந்திரம் பெற்ற நூற்றாண்டை அடுத்த 25 ஆண்டுகளில் கொண்டாடும் பொழுது நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் கதி சக்தி அணுகுமுறையின்கீழ் 7 முக்கியத் துறைகளிலும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புத் திட்டங்களை அறிவித்திருப்பதை எங்களது வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் பாராட்டி வரவேற்கிறது.

நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவேரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவது மிகவும் வரவேற்புக்குரியது. இதன் மூலம் கூடுதலான நீர்ப்பாசன வசதி, குடிநீர் வசதி கிடைப்பதுடன் மிக சிக்கனமான சரக்குப் போக்குவரத்துக்கான நீர்வழித்தடங்கள் ஏற்படுத்தவும் இயலும். நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூபாய் 44 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, வேளாண் நிலங்களை அளவீடு செய்யவும், உற்பத்தியை மதிப்பீடு செய்யவும், மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு உதவும் ட்ரோன் வசதி செய்யப்படவிருப்பதும், அனைத்துலக சிறுதானிய ஆண்டான 2022-23-ல் சிறுதானியங்களின் நுகர்வை அதிகப்படுத்தவும் வணிகப்பெயர் இடுவதையும் நாடு முழுவதும் ஊக்கப்படுத்தவிருப்பதும், ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவிருப்பதும் நம் நாட்டில் மீண்டும் ஓர் வேளாண்மை புரட்சியை ஏற்படுத்தும் திட்டங்களாகும்.

பொதுப் போக்குவரத்துக்கும், சரக்குப் போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் 25,000 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட விருப்பதும், நாடு முழுவதும் 2000 கிலோ மீட்டர் ரயில் வழித்தடங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தவிருப்பதும், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துகளை ஒருங்கிணைக்கவிருப்பதும், வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய நவீன ரயில் பெட்டிகளைத் தயாரிக்கவிருப்பதும், மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படவிருப்பதும், உள்ளூர் வணிகம் சிறப்பாக நடைபெறவும், ‘உழவு முதல் நுகர்வுவரை’ அனைவருக்குமான ஓர் அமைப்பும், சரக்கு சப்ளையில் தடையில்லாமல் இருக்கவும், ‘ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதும், பிரதமரின் கதி சக்தி அணுகுமுறையின்கீழ் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படவிருப்பதும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும் வகையில் நகர்புறங்களில் மின்சார வாகனங்களுக்கு ரீ சார்ஜ் செய்யப்படுவதற்கான மையங்களும், பேட்டாரிகளை மாற்ற புதிய திட்டங்களும் அமல்படுத்தப்படுத்தவிருப்பது பாராட்டுக்குரியது.

எண்ணெய் வித்துகள் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவதன் மூலம் நம் நாட்டு உணவு எண்ணெய் தேவையில் சுமார் 75 சதவீதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா உணவு எண்ணெயையே நம்பி இருப்பது கணிசமாகக் குறையும்.

ஃபிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது ரிசர்வ் வங்கி 2022-23ம் ஆண்டு மின்னணு ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) அறிமுகப்படுத்தும் என்ற அறிவிப்பை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம். நம் நாட்டின் உலக அளவிலான மின்னணு பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக இந்த நடவடிக்கை இருக்கும் என்பது உறுதி. அத்துடன் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீத வருமான வரி விதித்திருப்பது இந்த மின்னணு கரன்சி பரிவர்த்தனையை ஒழுங்குபடுத்தவும், சூதாட்டமாக இல்லாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளாகும்.

இந்த பட்ஜெட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சிக்கு அரசின் பொதுச் செலவினை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் மூலதனச் செலவை 35.4 சதவீதம் அதிகரித்து, வரும் 2022-23-ம் ஆண்டில் ரூ.10.68 லட்சம் கோடி செலவழிக்கவிருப்பதன் மூலம் பல கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேறும், வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்கள் கையில் பணப்புழக்கம் ஏற்படும்.

ஏமாற்றமும் கோரிக்கையும் :

இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கதிருப்பது மிகவும் ஆக்கப்பூர்வமான திட்டமாகும். அதிகமாக விற்கும் நுகர் பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என நீண்ட கலமாக வலியுறுத்தி வருகிறோம். வேலை வாய்ப்பை அதிகளவில் கொடுக்கும் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் பரவிக் கிடக்கும் சில்லறை வணிக நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் வகையில் இந்தியாவில் உள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நாடு முழுவதும் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் பெரிய கனரக தொழிற்சாலைகளிலும், இறக்குமதியை குறைக்க அப்பொருட்களை நமது நாட்டிலேயே தயாரிக்கவும் தான் தன் முதலீடுகளை பயன்படுத்த வேண்டுமே ஒழிய அவர்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. விரைவில் சிறிய வணிகங்களை பாதுகாப்பதற்கான நடடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் நம்புகிறது”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE