நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சம்பவம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டதால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று தேமுதிக மாவட்ட செயலாளர் மன்மதன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் சிலரும் வந்து கலந்துகொண்டனர். இதனால் அங்கிருந்த அதிமுகவினரிடையே குழப்பம் ஏற்பட்டது. தேமுதிகவினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விபரம் காலையில் கூட்டம் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானபோது அனைவருக்கும் தெரியவந்தது.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் தாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆலங்குடி நகராட்சி மற்றுமுள்ள பேரூராட்சிகளில் தங்கள் கட்சிக்கு உரிய இடம் வழங்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிகவினர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அதிமுக தரப்பில் தலைமையிடம் கேட்டு முடிவை சொல்வதாக கூறியதாகத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தங்களுக்கு உரிய தொகுதிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி, அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில், மீண்டும் அதிமுக உடன் கூட்டணி வைக்க தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்திருப்பது தமிழக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.