நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டம்; அழிவுக்கு வித்திடும்!

By காமதேனு

நிதிநிலை அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்புத் திட்டத்தால் மோடி அரசு அழிவுக்கான பாதையில் நாட்டை இட்டுச் செல்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கையின் பல்வேறு கூறுகள் குறித்து, பல தரப்பினர் தங்கள் கருத்துக்களை வழங்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், அத்துறை சார்ந்த தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ’மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை பருவகால மாற்றம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் வெகுவாய் விசனம் கொள்கிறது. ஆனால், சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கக்கூடிய நதிநீர் இணைப்புக்கான திட்டங்கள் குறித்தும் பேசுகிறது. வாய்ப்பந்தல் பட்ஜெட்டாக, இவையெல்லாம் கேட்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் மோடி அரசின் போக்கு அழிவுக்கே வித்திடுகிறது’ என்று சாடி உள்ளார்.

நதிநீர் இணைப்பு என்பது ஒரு காலத்தில் பெரியளவில், உலகம் முழுக்கவே பேசப்பட்ட கருத்தாக்கம் ஆகும். ஆனால் நதிகள் இணைப்பு என்பது இயற்கைக்கும், புவியியலுக்கும் எதிரானது என்பதை, சூழலியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்கூறிய பிறகு அதன் வேகம் குறைந்துள்ளது. சிறியளவிலான, அருகருகே உள்ள நதிகளின் நீர்த்தடத்தை இணைப்பது வேண்டுமாயின் ஓரளவுக்கு பயன்தரலாம். ஆனால் மிகப்பெரியளவில் நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு விரோதமானது.

சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பொறுப்பு வகித்த ஜெய்ராம் ரமேஷ், நடைமுறைக்கு பயனளிக்கக்கூடிய சூழல் செயற்பாடுகள் குறித்து இன்றளவிலும் விவாதித்து வருகிறார்.தற்போது, மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடாவாகவும் ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு வகிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE