மேற்குவங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி - கவர்னர் ஜெகதீப் தங்கர் இடையிலான மோதல் நாளுக்குநாள் முற்றி வருகிறது.
பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களிலும், முதல்வர் - கவர்னர் இடையிலான மோதல் நிலவி வருகிறது. மேற்கு வங்கம் அதில் முதன்மை வகிக்கிறது. கவர்னரின் ட்விட்டர் பதிவுகள் தன்னை மனரீதியாக பாதிப்பதாக கூறி அவரை ட்விட்டரில் பிளாக் செய்திருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று(ஜன.31) மாலை தெரிவித்தார். ஆனால் தனது கருத்துக்களை வாட்ஸ் அப் வாயிலாக முதல்வருக்கு அனுப்பிவைப்பதாக, கவர்னர் ஜெகதீப், அது குறித்த தகவல்களை பகிரங்கமாக ட்விட்டரில் வெளியிட்டார்.
தன்னை ட்விட்டரில் பிளாக் செய்த முதல்வரை, கவர்னர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டது, மேற்குவங்க அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. முதல்வர் மம்தாவை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்ட தலைவர்களும், ட்விட்டரில் கவர்னரை பிளாக் செய்து வருகின்றனர். இவற்றின் மூலம் மேற்குவங்கத்தில் கவர்னர் - முதல்வர் இடையிலான மோதல் இன்னொரு கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
தன்னை அவமானத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் மாநில கவர்னர் ஜெகதீப் தங்கர், ஜனநாயகத்துக்காக தான் பொறுமை காத்து வருவதாகவும் தெரிவித்து வருகிறார். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியோ, ’தலைமைச் செயலர் முதல் டிஜிபி முதல் மாநில உயரதிகாரிகளை கவர்னர் மிரட்டுகிறார்’ என குற்றம் சாட்டுகிறார்.
’ராஜ்பவனில் அமர்ந்தபடி எங்களை உளவுபார்ப்பதுதான் அவரது முழுநேர வேலை. பெகாஸஸ் கொண்டு எங்கள் போன்களை ஒட்டுக்கேட்கிறது ராஜ்பவன்’ என்றெல்லாம் மம்தா குற்றம்சாட்டுகிறார். கவர்னரை மாற்றும்படி எத்தனையோ முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும், நடவடிக்கை இல்லை எனவும் முதல்வர் மம்தா குறைபடுகிறார்.
மாநில நலனுக்கான பல முக்கியக் கோப்புகள் ராஜ்பவனில் தேங்கிக் கிடப்பதாக திருணமூல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசு நிர்வாகத்தில் கவர்னர் அளித்து வரும் முட்டுக்கட்டைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பவும், ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றவும் திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.