செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை: ஊழியர்கள், பொதுமக்கள் அவதி

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அலுவலர்கள், ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அருகில் வனப்பகுதி உள்ளது. இங்கு பல வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு கூட்டமாக சுற்றி திரிகின்றன. தற்போது குரங்குகள் கூட்டமாக குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், பழங்களை தூக்கிச் செல்கின்றன.

வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்துகின்றன. மின்வயர்கள், செல்போன் கேபிள் வயர்கள் மீது ஏறி, அவற்றை துண்டித்து விடுகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில வாரங்களாக குரங்குகள் அதிகம் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் அலுவலர்கள், ஊழியர்கள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களில் இருக்கும் உணவுகளை எடுத்து தின்றுவிட்டு மீதமுள்ளதை தூக்கி வீசி விடுகின்றன. மேலும் ஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்களின் கையில் வைத்திருக்கும் பொருட்களை அபகரிக்க முயல்கின்றன.

மிரண்டு ஒதுங்குபவர்களை கடிப்பது போல் சென்று அச்சுறுத்துகிறது. ஆட்சியர் அலுவலக வளாகப் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு ஊழியர்களை அச்சுறுத்துகிறது. மேலும் குரங்குகள், அலுவலக வளாகத்தில் நிற்கும் வாகனங்கள் மீது ஏறி, பொருட்களை எடுப்பது, வாஷ் பேசினில் தண்ணீரை திறந்து விடுவது, அலுவலகத்துக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்வது என்று இன்னல்கள் விளைவிக்கின்றன. மேலும், பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பிடுங்கியும் செல்கின்றன. சில நேரங்களில் குரங்குகள் நின்று பயமுறுத்துவதால், சிலர் பயந்து ஒடி காயமடைந்துள்ளனர்.

இதனால் அங்குள்ள ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ஊழியர்கள், பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு, குரங்குகளைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என அலுவலர்கள், ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE