கட்சி அலுவலக வாயிலில் காங்கிரஸ் பெண் பிரமுகர் தர்ணா!

By கரு.முத்து

திருச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் பங்கீடு செய்வது தொடர்பான கூட்டம், நேற்று(ஜன.29) கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு மாநகராட்சிக்கான தேர்தலில் 4 வார்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகக் குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு, காங்கிரஸ் கட்சி சேவா தளம் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 16 இடங்களை கட்சி தலைமை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "திமுகவினரால் ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மட்டுமே மேற்கண்ட 4 வார்டுகளிலும் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஏற்கனவே 10 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கும்போது, தற்போது அதிலிருந்து உயர்த்தி 16 வார்டுகளையேனும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் குறைந்தது 9 இடங்களிலாவது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுவோம்" என்று தெரிவித்தார்.

இதனால் திருச்சி காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பமும், பதட்டமும் நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE