கஸ்டம்ஸ் சாலையை காப்பாத்துங்கப்பா..

By கரு.முத்து

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கடலூரில் பெண்ணையாற்றங்கரையில், தற்போதும் மக்களின் பயன்பாட்டில் உள்ள கஸ்டம்ஸ் சாலை, குப்பைக் கிடங்காக மாறிவருவதால் அதைக் காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள் கடலூர் மக்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கண்டரக்கோட்டையில் இருந்து கடலூர் வரையிலும் பெண்ணையாற்றங்கரை ஓரத்தில் புதியதாக சாலை அமைக்கப்பட்டது. அதில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதனால் அந்த சாலைக்கு கஸ்டம்ஸ் சாலை என்றே பயன்பாட்டில் பெயர் வந்தது. காலப்போக்கில் இந்த சாலையை கடலூர் மாவட்ட நிர்வாகம் பராமரிக்காமல் விட்டு விட்டதால் ஒரு கட்டத்தில் பயன்பாட்டில் இல்லாமல் போனது. அதனால் சாலையோரம் சொந்தமான நிலம் உள்ள விவசாயிகள் பலரும் அதை ஆக்கிரமிப்பு செய்தனர்.

கடலூர் நகரில் ஏற்பட்டு வந்த பெரும் வாகன நெரிசல் காரணமாக கடலூர் அனைத்து பொது நல இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பல்வேறு தொடர் போராட்டம் நடத்தி புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதனால் ஆல்பேட்டையில் இருந்து செம்மண்டலம் வழியாகச் செல்லும் புறவழிச்சாலைக்கு இணையாக இந்த கஸ்டம்ஸ் சாலையை பயன்படுத்தலாம் என்ற யோசனை பலராலும் முன் வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் கஸ்டம்ஸ் சாலையை செப்பனிட்டு புதிதாக சாலை அமைக்கலாம் என முடிவு செய்தது. நெடுஞ்சாலைத்துறையில் இதற்கான செயல் திட்டம் கோரப்பட்டது. ஆனால், திட்ட மதிப்பீடு 200 கோடி ரூபாயைத் தாண்டியதால் நெடுஞ்சாலைத் துறை மூலம் செயல்படுத்த முடியாது என இந்த திட்டம் கைவிடப்பட்டது.

பிறகு சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இந்த சாலையை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி திட்ட இயக்குனர் மகேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து ஆற்றங்கரையோரமாக கண்டரக்கோட்டை வரை செல்லும் இந்தச் சாலையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

சி.கே ராஜன்

இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.கே ராஜன், ”நகரின் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகள் வழியாக செல்லாமல் இந்த சாலையை பயன்படுத்தி மிக எளிதாக கடலூர் நகரை கடந்து விடலாம். அதனால் பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சாலையின் இருபுறமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை அதிகம் இல்லாததால், இங்கே எப்போதும் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருக்கும். அதனை பயன்படுத்திக் கொண்டு நகரில் உள்ள கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் கொண்டுவந்து இந்த சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர்.

தற்போது சாலை நெடுகிலும் ஓரங்களில் குப்பைகள் அதிகம் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை பயன்படுத்தும் மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த பழமையான சாலை இப்படி குப்பைக்கிடங்காக மாறுவதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE