தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்!

By காமதேனு

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில், 2 முன்னாள் முதல்வர்கள் தோல்வியடைந்த தொகுதிகளில், அவரவர் மகள்கள் களமிறங்கி உள்ளனர். தந்தையரின் தோல்விகளுக்கு பழிதீர்க்கப்போவதாக மகள்களை முன்னிறுத்தி பிரச்சாரம் அங்கே களைகட்டி இருக்கிறது.

தேர்தல் என்றாலே சுவாரசியங்களுக்கும் பஞ்சமிருக்காது. அவற்றில் ஒன்று உத்தரகண்ட் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. பிப்.14 அன்று நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் நட்சத்திர தொகுதிகளாக கோத்வார் மற்றும் ஹரித்துவார் ரூரல் ஆகியவை கவனம் ஈர்த்துள்ளன.

பாஜக முன்னாள் முதல்வரான புவன் சந்திர கந்தூரி, 2012 தேர்தலில் கோத்வார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர சிங் நேகியிடம் 4623 ஓட்டு வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தார். தற்போதைய தேர்தலில் மீண்டும் சுரேந்திர சிங் போட்டியிடும் இந்த தொகுதியில், அவரை எதிர்த்து கந்தூரியின் மகள் ரீத்து கந்தூரி பூஷண் களமிறங்கி உள்ளார்.

அதேபோல காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், 2017 தேர்தலில் ஹரித்துவார் ரூரல் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தன்னை எதிர்த்து நின்ற பாஜகவின் வேட்பாளர் சுவாமி யதிஷ்வரானந்திடம் 12,278 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சுவாமி யதிஷ்வரானந்த் போட்டியிட, அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஹரீஷ் ராவத் மகள் அனுபமா ராவத் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

எதிரெதிர் முகாம்களில் இருந்து, வெவ்வேறு தொகுதிகளில் கோதாவில் குதித்திருக்கும் இந்த 2 முன்னாள் முதல்வர்களின் மகள்களும், தத்தம் தந்தையரின் தோல்விக்கு பழிவாங்குவார்களா என்பது வாக்கு எண்ணிக்கை தினமான மார்ச்.10 அன்று தெரிந்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE