பதவி விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம்!

By காமதேனு

“ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்” என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28.01.2022 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

மேற்படி பதவி இடத்துக்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியை உரியவாறு ராஜினாமா செய்யாமல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் நேர்வில், அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, பிரிவு 38 (3) (q) அல்லது 43 (6)-ன்படி, அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு, மேற்படி சட்டம், பிரிவு 41(1)-ன்படி, அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதிநீக்கம் செய்ய ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE