கரோனாவைப் பரப்பும் பாஜக: சமாஜ்வாதி புகார்

By ஆர். ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில், முகக்கவசம் இன்றி பிரச்சாரம் செய்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதனால், பாஜக கரோனாவை பரப்புவதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் புகார் கூறியுள்ளார்.

ஏழு கட்டங்களாக உபியில் நடைபெறும் சட்டப்பேரவைக்கானத் தேர்தலில், நேரடிப் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வீடுகளுக்கு 10 பேர் கொண்ட சிறிய குழுவுடன் வாசலில் நின்று பிரச்சாரம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உபி மேற்குப்பகுதியின் 55 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 10-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், கடந்த திங்கள்கிழமை முதல் பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரான அமித் ஷா வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார்.

கரோனா பரவல் மீதான மத்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா மீறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதில் அமைச்சர் அமித் ஷாவுடன் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி, திரளான அளவில் பாஜகவினரும் உடன் செல்கின்றனர்.

எச்சிலை தொட்டு அமித் ஷா...

இந்தப் பிரச்சாரத்தின் போது அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டப் பலரும் முகக்கவசம் அணியாமலே பிரச்சாரம் செய்யும் படங்களும், வீடியோ பதிவுகளும் வெளியாகி வருகின்றன. இத்துடன் தனது கைகளில் பிரச்சார நோட்டீசுகளையும் அமித் ஷா வீடு வீடாக விநியோகித்து வருகிறார். அப்போது அவர் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை எனவும் புகார் கிளம்பியுள்ளது. பரவலுக்கு ஆபத்தான வகையில், தனது கட்டை விரலால் எச்சிலை தொட்டு அமித் ஷா நோட்டீசுகளை அளிப்பதும் தெரிந்துள்ளது.

இதுகுறித்து உபியின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் கூறும்போது, ‘‘பாஜகவின் பிரச்சாரத்தில் கரோனா பரப்பப்படுகிறது. விரலில் எச்சிலைத் தொட்டு அவர்கள் நோட்டீசுகளை விநியோகிக்கின்றனர். இதனால், நோட்டீசுகள் மூலமாக பாஜக பிரச்சாரத்தின் பேரில் வீடுவீடாகக் கரோனாவை பரப்புகிறது. இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளால், உபியில் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் மீது வழக்குகளும் பதிவுசெய்து தேர்தல் ஆணையத்தால் நோட்டீஸ் அளிக்கப்பட்டும் வருகிறது. எனினும், அவர்களது நடவடிக்கைகள் தேர்தல் பிரச்சாரங்களில் தவிர்க்க முடியாததாக உள்ளன.

கரோனா பரவலால் மத்திய தேர்தல் ஆணையம் தனது விதிமுறைகளில் 2022-ல் மாற்றம் செய்திருந்தது. இதில், பிரச்சாரம் செய்பவர்களுக்கு முகக்கவசம் அணிவதுடன் சமூக விலகலையும் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தி உள்ளது. இந்நிலையில், உபியில் கவுதம்புத் நகர் மாவட்டத்தில் காங்கிரசுக்காக சத்தீஸ்கர் முதல்பவர் பூபேந்தர் பகேல், பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் மீது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட முதல்வர் பகேல், ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அமைச்சர் அமித் ஷா கைரானாவில் ஜனவரி 22-ல் கும்பலாக முகக்கவசம் இன்றி பிரச்சாரம் செய்வது பதிவாகி உள்ளது.

அமித் ஷா பிரச்சாரம்

இதுகுறித்து காங்கிரஸ் முதல்வரான பகேல் குறிப்பிடும்போது ‘‘மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக ‘பத்து பேர்’ உடன் வாக்குசேகரிக்கும் காட்சி இது. இந்தப் பதிவை மத்திய தேர்தல் ஆணையம் தன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அமித் ஷாவை தனது தேர்தல் விளம்பரத் தூதுவராக அறிவிக்க வேண்டும். நிலைமை இதுபோல் இருக்க, காங்கிரஸ் முதல்வர் மீது மட்டும் வழக்கு ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2020-ல், மத்திய அமைச்சர் அமித் ஷா கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பாஜகவின் தலைமை நிர்வாகிகளில் 52 பேருக்கும் கூட கரோனா தொற்றாகி இருந்ததும் நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE