மாரியப்பனின் சகோதரர் காதல் திருமணம்!- மகளை கடத்தியதாக தந்தை புகார்

By காமதேனு

பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலத்தை சேர்ந்த மாரியப்பனின் சகோதரர் காதல் திருமணம் செய்துள்ளார். தனது மகளை மாரியப்பனின் சகோதரர் கடத்திச் சென்றுவிட்டதாக பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "கடந்த 27ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது மகள் பவித்ரா (20) அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. விசாரணை செய்ததில், பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த கோபி (24) கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டுதர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோபியும், பவித்ராவும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, காதல் திருமணம் செய்து கொண்ட இவரும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலுார் மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இரண்டு பேரின் பெற்றோர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE