மரண படுக்கையில் தமிழக சட்டம் ஒழுங்கு: அண்ணாமலை குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளன என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது.

முதல்வரின் பொறுப்பில்இருக்கும் காவல்துறை இயங்குகிறதா என்ற கேள்வியையும், அச்ச உணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கின்றனர். பெருகியிருக்கும் கஞ்சா புழக்கத்தினால், இளைஞர்களை அடிமையாக்கி, குற்றச் செயல்களில் கூலிப்படையாகச் செயல்பட தூண்டப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.

சென்னையின் மிக முக்கியப் பகுதியான அண்ணாநகர் பகுதியில் துணை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் தமிழகபாஜக மகளிர் அணி மாநிலபொதுச் செயலாளர் நதியாவின் கணவர் சீனிவாசன் மீது கூலிப்படையினரைக் கொண்டு நேற்று பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. இதுகாவல்துறை முற்றிலும் செயலிழந்திருப்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மரணப் படுக்கையில் கிடப்பதை உணர முடிகிறது.

சென்னையில் நேற்று மட்டும்நடந்த 3 கொலைகள் இங்கிருக்கும் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் குற்றச் செயல்களையும், போதைப் பொருட்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE