இந்து Vs விவசாயி: ஊசலாட்டத்தில் மேற்கு உத்தரப் பிரதேசம்!

By எஸ்.சுமன்

உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தீர்மானிக்க உள்ள, மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பெரும்பான்மையினர் ஊசலாட்டத்தில் உள்ளனர்.

உபியில் ஆட்சியமைக்கும் கட்சிகளுக்கு, சட்டப்பேரவையின் 403 தொகுதிகளில் மேற்கு உபியின் 140 தொகுதிகள் மிக முக்கியமானவை. இந்து - முஸ்லிம் வேறுபாடுகள் செழித்திருக்கும் இப்பகுதியில், ஓட்டுகளை அறுவடை செய்வது எளிது. கடந்த தேர்தலில் மகா பஞ்சாயத்துகள் வாயிலாக ஜாட் சமூகத்தினர் ஓட்டுகளை குவித்த பாஜகவுக்கு, டெல்லி விவசாயிகள் போராட்டமும் அதுதொடர்பான வடுக்களும் புதிய சவால்களை உருவாக்கி உள்ளன.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் ஜாட் சமூகத்தினர், ஒரு வருடமாக நீடித்த விவசாயிகள் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்தனர். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறக் கோரும் போராட்டத்தில் அவர்களில் கணிசமானோர் பங்கேற்கவும் செய்தனர். அப்போது பாஜகவினரால் தூற்றுதலுக்கு ஆளானதையும், விவசாயிகள் மீதான அடக்குமுறையையும் அவர்கள் இன்னமும் மறக்கவில்லை.

இடைத்தேர்தல் சறுக்கலை அடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் முடிவை பாஜக அரசு எடுத்தது. உபியில் அதன் கசப்புகள் நீடிக்காதிருப்பதற்காக, உள்ளூர் தலைவர்களை நேரில் சந்தித்து பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள், மலிவான எதிர்ப்புகள், வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற்ற பிறகும் வருத்தம் தெரிவிக்காதது, குறைந்தபட்ச ஆதாய விலை குறித்து இன்னமும் வாய் திறக்காதது என விவசாயிகள் மத்தியில் ஆற்றாமைகள் தீர்ந்தபாடில்லை. அவர்களை சந்திக்கும் பாஜக பிரதிநிதிகள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பபெற்றது முதல் விவசாயத்துக்கு பாஜவின் அனுகூல திட்டங்கள்வரை எடுத்துக்கூறுகிறார்கள்.

கடைசியாக, விவசாயிகள் என்பதற்கு அப்பால் இந்து என்ற அஸ்திரத்தை ஏந்துகிறார்கள். மேற்கு உபியில் குறிப்பாக முஸாஃபர்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து - முஸ்லிம் பேதங்கள் அதிகம். கடந்த ஆண்டுகளின் கலவரங்கள் அவை தொடர்பான வழக்குகள் விசாரணைகள் அந்த மக்களை துரத்தி வருகின்றன. முந்தைய சமாஜ்வாதி ஆட்சியில் சுமத்தப்பட்ட, இந்து இளைஞர்கள் மீதான கணிசமான வழக்குகள் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளன. சிறையிலிருந்த அவர்களில் பெரும்பாலானோரை பாஜக ஆட்சிக்கு வந்ததும் வெளியே நடமாடச் செய்தது. மீண்டும் அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தால், வழக்குகளை சுமக்கும் இந்து இளைஞர்கள் அனைவரும் சிறைக்கு திரும்புவது உறுதி என்று பாஜக நிர்வாகிகள் வீசும் அஸ்திரம் நன்றாகவே வேலை செய்கிறது. அமித் ஷா களமிறங்கி ஜாட் சமூகத் தலைவர்களை சந்தித்து பேசியதும் ஓரளவு வேலை செய்கிறது.

பாஜகவும் வேண்டாம் சமாஜ்வாதியும் வேண்டாம் என்று விவசாயிகளில் ஒரு தரப்பினர், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் அவர்களுக்கு தீவிர ஆதரவளித்த ஆர்ஜேடிக்கு செலுத்தும் நன்றியாகவும் இதைக் கருதுகின்றனர். அப்படிப் பார்த்தாலும், சமாஜ்வாதிக்கான ஓட்டுகளே பிரியும் என்பதால், குறைந்த வித்தியாசத்திலேனும் வெற்றி வாய்த்துவிடும் என்ற நப்பாசை கொண்டிருக்கிறது பாஜக.

மற்றபடி ஜாட் சமூகத்தினரை உள்ளடக்கிய மேற்கு உபி பெரும்பான்மை மக்களின் முன்னால் தற்போதுள்ள ஒரே கேள்வி, இந்துவாக வாக்களிப்பதா அல்லது விவசாயியாக வாக்களிப்பதா என்பதுதான். பெரும் ஊசலாட்டத்திலுள்ள இந்த பெண்டுலத்தின் இறுதி சாய்வே, மேற்கு உபியின் முடிவையும் அதன் வாயிலாக உபி புதிய அரசையும் தீர்மானிக்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE