கண்டமனூர்: வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் வருசநாடு பகுதி தேங்காய்களின் விலை வெகுவாய் குறைந்துள்ளது. இதனால் தேங்காய் உரிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 55 ஆயிரத்து 575 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சுமார் 36 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடமலை-மயிலை ஒன்றியத்தைப் பொறுத்தளவில் கடமலைக்குண்டு, பாலூத்து, வருசநாடு, சிங்கராஜபுரம், கண்டமனூர், குமணன்தொழு, மயிலாடும்பாறை தங்கம்மாள்புரம் ஆண்டிபட்டி, அம்பாசமுத்திரம், நாகலாபுரம் அய்யனார்புரம் பாலூத்து ஆகிய பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய்கள் காங்கேயம், திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தேனி மாவட்டத்திற்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் தேங்காய்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
» விருதுநகர்: மூதாட்டி கொலை வழக்கில் சிறப்பு எஸ்.ஐ மகன் கைது
» ரூ.10.17 கோடி தங்க கடத்தல் வழக்கில் கைதானவர் மீதான காபிபோசா சட்டம் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு
தற்போது ஒரு தேங்காய் ரூபாய் 10 முதல் 12 வரை கொள்முதல் செய்வதால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேங்காய் விலை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய் உரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. தோப்புகளில் மொத்தமாக இவை குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மேலப்பட்டி விவசாயி வேல்முருகன் கூறுகையில் தென்னை வளர்ப்பில் தற்போது செலவினம் அதிகரித்துவிட்டது. கூலியாட்களும் கிடைப்பது சிரமமாக உள்ளது. நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.