அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணைக் குழு அமைத்து பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தற்கொலை மாணவி தொடர்பாக வெளியாகி இருக்கும் புதிய வீடியோ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த அரியலூர் பகுதியை சேர்ந்த லாவண்யா என்ற மாணவி அண்மையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு விடுதி வார்டன் அதிகப் பணிகள் கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தியதால் தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதாக, பாஜகவினர் குரல் கொடுத்ததும் விவகாரம் வேறு விதமாய் பற்றிக்கொண்டது. தொடர்ந்து தங்கள் தரப்புக்கு ஆதாரமான வீடியோவினையும் அவர்கள் வெளியிட்டனர்.
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய பாஜகவினர் போராட்டங்களிலும் இறங்கினர். இதனிடையே கட்சியின் தேசிய தலைமை, மாணவியின் தற்கொலை தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு, விசாரணை குழு ஒன்றினை அமைத்துள்ளது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அறிவித்திருக்கும் அந்த குழுவில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பாஜக மகளிர் நிர்வாகியினர் இடம் பிடித்துள்ளனர்.
பாஜக விசாரணை குழு குறித்த அறிக்கை டெல்லியில் வெளியான நேரம், தமிழகத்தில் மாணவி தற்கொலை தொடர்பாக புதிய வீடியோ வெளியானது. பாஜகவினர் முன்வைக்கும் புகார்களுக்கு எதிராக மாணவியின் பேட்டி அதில் அடங்கி இருந்தது. சாகும் தருவாயிலுள்ள அந்த மாணவியிடம் சிலர் கேள்விகள் எழுப்புவதும், அதற்கு அவர் பதிலளித்ததும் பதிவாகி உள்ளது.
அந்த வீடியோவில், விடுதி வார்டன் உள்ளிட்டோர் தனக்கு அதிக வேலை வைத்ததால், நன்றாக படித்து வரும் தன்னுடைய மதிப்பெண்கள் குறைந்தது குறித்தும் அதனால் தான் மனமுடைந்தது குறித்தும் மாணவி தெரிவிக்கிறார். ’பள்ளியில் பொட்டு வைக்கக்கூடாது’ என்கிறார்களா என்ற கேள்விக்கு, மாணவி ’இல்லை’ என்கிறார். இதன் முழுமையான வீடியோ வெளியானால் மட்டுமே மாணவி தற்கொலை தொடர்பாக புதிதாக எழுந்திருக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு எதிரான கண்டனங்கள் பொதுவெளியில் அதிகரித்தனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, மாணவி தற்கொலை தொடர்பாக திட்டமிட்டு விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக உண்மையை மறைப்பதாகவும், அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவி தற்கொலை விவகாரத்தின் போக்கு தமிழகத்தில் பாஜகவுக்கு சங்கமூட்டும் வகையில் திரும்பிய நாளில், கட்சியின் டெல்லி மேலிடத்தின் விசாரணைக் குழு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.