திரையுலகின் வழியே அரசியலுக்கு அடியெடுக்கும் நடிகர்களின் வரிசையில், ஆர்ப்பாட்டமின்றி சாதித்து வருகிறார் விஜய். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பத்துக்கும் குறைவான மாவட்டங்களில் மட்டுமே போட்டியிட்டு நூற்றுக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிகாரபூர்வமாக களமிறங்குகிறது.
திரையுலகின் தற்போதைய முன்னணி நட்சத்திரங்களில் சற்று வித்தியாசமானவர் நடிகர் விஜய். திரையில் ஆர்ப்பாட்டமாக தோன்றினாலும், திரைக்கு அப்பால் அமைதியின் சொரூபமாய் வீற்றிருப்பார். அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அருகில் இருப்பவர்கள் கூட அதிகம் ஊகித்தறிய முடியாது. தந்தை தோள்கொடுத்தபோதும், பெரும் போராட்டத்துக்குப் பின்னரே அவரால் சினிமாவில் தாக்குபிடிக்க முடிந்தது. அதிலும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராய் தன்னை தக்கவைப்பதற்கும், பெரும் உழைப்பையும், பொறுமையான மெனக்கிடலையும் முதலீடு செய்திருக்கிறார் விஜய்.
சினிமாவின் வெற்றிக்கு அப்பால் விஜய்க்கு அரசியலிலும் ஆர்வமுண்டு. ஆனால், திரைப்பயணத்தை போலவே தெளிவும் திடமுமாக அரசியலை நோக்கி அவர் பயணிக்க விரும்புகிறார். விஜய்யை குறுக்கிட்ட அரசியல் அழுத்தங்கள், அமலாக்கத் துறை வரை நீண்ட நெருக்கடிகள் ஆகியவற்றின்போது அவரின் அரசியல் பிரவேசம் குறித்த கணிப்புகள் அவ்வப்போது எழுந்து அடங்கும். சக நட்சத்திர போட்டியாளரான நடிகர் அஜித்குமார் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்றதுடன், ’தல’ போன்ற அடைமொழிகளும் வேண்டாம் என்றபடி அடக்கி வாசிக்கிறார். அதாவது நிஜமாக அடக்கி வாசிக்கிறார். ஆனால் அடக்கி வாசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் நடிகர் விஜய், நிதானமாக அரசியலுக்கான அடியெடுப்புக்கு திட்டமிட்டு வருகிறார். அதற்கேற்ப தனது ரசிகர் மன்றத்தையும் முறையாகப் பராமரித்து வலுப்படுத்தி வருகிறார்.
நடிகர் விஜய்யின் அரசியல் ஆர்வத்தை உள்வாங்கியவராகவே, அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் பெயரில் தனிக்கட்சி முயற்சியில் குதித்தார். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தந்தையின் போக்கும், லகான் தன் கையில் இல்லாததும், அமைதியாய் அடியெடுக்க விரும்பும் மகனுக்கு பிடிக்கவில்லை. சினிமாவில் இன்னமும் பலசுற்றுகள் வலம்வர வேண்டும் என்பதோடு, நடிப்பு, சம்பாத்தியம், விருதுகள், பன்மொழி திரைப்படங்கள் என சினிமா குறித்த கனவுகள் விஜய்க்கு அதிகம் உண்டு. அதனால், தனது ரசிகர் மன்றத்தை தவறாக வழிநடத்த முயல்வதாக தந்தை சந்திரசேகருடன் விஜய் முரண்பட்டார். இந்தத் தகராறு தந்தை மகன் இடையே பேச்சுவார்த்தை அற்றுப்போகும் அளவுக்கு வலுத்தபோதும், விஜய் தனது பிடியிலிருந்து இறங்கிவரவில்லை.
விஜய்யை பொறுத்தவரை, சினிமாவில் சாதித்த பிறகே முழுநேர அரசியல் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவசரப்பட்டு அரசியலில் இறங்கி, அனுபவம் வாய்ந்த அரசியல் பிரபலங்களிடம் அடிவாங்குவதை விட, சினிமாவில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை உருப்படியாக பயன்படுத்திக்கொள்வதும், அப்படியே தனது ரசிக வட்டாரத்தை விரிவுபடுத்துவதுமான முடிவில் இருக்கிறார். நடிப்பில் உச்சங்கள் தொட்ட நடிகர் கமல்ஹாசன், அரசியலில் சறுக்கியதை பாடமாக விஜய்யின் நலம் விரும்பிகளும் எடுத்துச்சொல்லி வருகிறார்கள். அதேவேளையில் படிப்படியாக அரசியலில் ஆழம்பார்க்கவும் விஜய் விரும்புகிறார். இது கிட்டத்தட்ட நடிகர் விஜயகாந்தின் பாணி.
சினிமாவில் வாய்ப்புகள் குறையும்வரை அரசியல் யோசனையை அப்பால் வைத்திருந்தார் விஜய்காந்த். அப்படியே ரசிகர்களின் அரசியல் ஆர்வத்துக்கு தூபம் போட்டும் வந்தார். அவ்வப்போதான விஜய்காந்த்தின் கருத்துகள், அரசியல் பேச்சுகள் ரசிகர்களை தயார்செய்து வைத்திருந்தன. நேரடி அரசியலில் விஜய்காந்த் குதித்தபோது, கட்சித் தொண்டர்களாக உருமாறிய ரசிகர்கள் கற்பூரம்போல பற்றிக்கொண்டனர். விஜய்காந்தின் வழியில் விஜய்யும் ரசிகர்களின் அரசியல் ஆர்வத்துக்கு வழிவிட்டு வருகிறார். நேரடியாக அரசியல் பேசாத விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் போட்டியிடுவதற்கு மறுப்பு சொல்வதில்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பது சுயேட்சைகளின் மத்தியிலான போட்டி என்றபோதும், கட்சிகள் அவற்றின் சின்னங்கள், பிரபலங்களின் செல்வாக்கு ஆகியவற்றுக்கு ஏற்பவே தேர்தல் முடிவுகள் தீர்மானமாகும்.
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆர்ப்பாட்டமின்றி போட்டியிட்டு நூற்றுக்கும் மேலான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றி பெற்றபோது, அவர்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியே பரவியபோதுதான், விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் வெற்றிகள் குறித்தே பொதுவெளி அறிந்துகொண்டது. இம்முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமடைந்தனர். அவர்களது மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்தும் சமிக்ஞைகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தின் மாநகராட்சிகள்(21), நகராட்சிகள்(138), பேரூராட்சிகள்(490) ஆகியவற்றின் 12,838 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிப்.19 அன்று ஒரேகட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக விஜய்யின் மக்கள் இயக்கமும் அதிகாரபூர்வமாக களமிறங்குகிறது. மன்றத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டத்தில் வேட்பாளர்களை முடிவு செய்யவும், அப்படித் தேர்வாகும் வேட்பாளரின் பிரச்சாரத்தில் விஜய்யின் படம், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி உள்ளிட்ட அடையாளங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மன்றத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்களின் வழியே ஆழம்பார்க்கும் விஜய், விரைவில் தனது மவுனம் கலைந்து நேரடி அரசியலிலும் குதிப்பார் என அவரது ரசிகர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். ஏற்கெனவே விஜய்யின் ரசிகக் கண்மணிகள், விஜய் - உதயநிதி இடையேதான் எதிர்கால தமிழக முதல்வருக்கான போட்டி இருக்கும் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் முழங்கி வருகிறார்கள். விஜய்யின் நிதானமான நகர்வுகளைப் பார்க்கும்போது, அந்த ரசிக ஆர்வங்கள் அர்த்தம் பொதிந்ததாகவே தெரிகின்றன.