டெல்லியில், உத்தரப் பிரதேசத்தின் ஜாட் சமூகத்தின் 250-க்கும் மேற்பட்ட தலைவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். இதில் அவர், “சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் மடியை மீண்டும் நிரப்புங்கள்” என வேண்டியதாகச் சொல்லப்படுகிறது.
உபியின் சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்டமாக அதன் மேற்குப்பகுதியில் தொடங்குகிறது. இங்கு முஸ்லீம்களுடன் ஜாட் சமூகத்து இந்துக்களும் அதிகமாக உள்ளனர். இதில் ஜாட்கள், இந்தமுறை பாஜகவுக்கு எதிராகத் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கு இன்னும் தீராத கரும்பு விவசாயிகள் பிரச்சினையும், டெல்லியின் விவசாயிகள் போராட்டமும் காரணமாகி விட்டது. இதனால், அவர்களை பாஜக பக்கம் மீண்டும் திருப்ப ஜாட் சமூகத்தினருடன் அமித் ஷா ஒரு கூட்டம் நடத்தினார். இதில், ஜாட் சமூகத்தின் சார்பில் 250-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “கடந்த 2014, 2019 மக்களவை மற்றும் 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த ஆதரவை நினைவுகூர்ந்தார். இதேபோல், மீண்டும் ஜாட் சமூகத்தினர் பாஜகவின் மடியை நிரப்பி உபியில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். கடந்த 650 வருடங்களாக ஜாட் சமூகத்தினர் ஒன்றிணைந்து முகலாய மன்னர்களை விரட்டியதாக நினைவுகூர்ந்த அமித் ஷா, இப்பணியில் பாஜக சமூகமும் அவர்களுடன் இணைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த உறவை உபி சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
உபியில் சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் முதல்வராக இருந்தபோது, கடந்த 2013-ல் முசாபர்நகரில் மதக்கலவரம் உருவானது. இதில், அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் தம் வீடு, உடைமைகளை இழந்தனர். இதையடுத்து உபி மேற்குப்பகுதியில் இந்து, முஸ்லீம்கள் இடையே பிளவு ஏற்பட்டது. இச்சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பாஜக, 2014 மக்களவை தேர்தலில் பெரும்பலன் பெற்றது. இதே ஆதரவு, பிறகு நடைபெற்ற 2017 சட்டப்பேரவை மற்றும் 2019 மக்களவை தேர்தல்களிலும் பாஜகவுக்கு கிடைத்தது.
எனினும், டெல்லி விவசாயப் போராட்டத்தின் தாக்கமாக உபியின் மேற்குப்பகுதியின் ஜாட் சமூகத்தினர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர். இப்போராட்டம் எதிர்த்த 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதன் பிறகும் ஆதரவு கிடைக்காமல் போகும் என அஞ்சிய பாஜக, அமித் ஷாவை வைத்து ஜாட் சமூகத்தினருடன் இந்தச் சந்திப்பை நடத்தி உள்ளது. உபியின் 7 கட்ட தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ல் வெளியாக உள்ளன.