ரூ.10.17 கோடி தங்க கடத்தல் வழக்கில் கைதானவர் மீதான காபிபோசா சட்டம் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: இலங்கையிலிருந்து கடல் வழியாக ரூ.10.17 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய வழக்கில் கைதானவர் மீதான காபிபோசா சட்டத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 8.2.2023-ல் மண்டபம் துறைமுக பகுதியில் வருவாய் புலனாய்வு பிரிவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு படகில் கொண்டுவரப்பட்ட தங்கத்தை ஜிபிஎஸ் உதவியுடன் கடலுக்குள் போட்டுவிட்டு, பின்னர் அதை எடுத்து டூவீலர்களில் கொண்டு செல்ல முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10.17 கோடி மதிப்புள்ள 17.740 கிலோ அளவிலான 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் காபிபோசா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், முகம்மது சாதிக் அலி(33) என்பவர் மீதான காபிபோசா சட்டத்தின் கீழான தடுப்புக்காவலை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சபீனாபீவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேகர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “காபிபோசா சட்ட நடவடிக்கை தொடர்பாக மனுதாரருக்கு கொடுத்த ஆவணங்களில் தவறான தகவல்களையும், முரண்பட்ட தகவல்களையும் கொடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அறிவுரை குழுமத்திடம் முறையிடலாம் என்பதை ஆலோசனைக் குழுவில் முறையிடலாம் எனக் கூறியுள்ளனர். இதன்படி, ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பிய மனு அப்படி ஒரு முகவரியே இல்லையென திரும்பி வந்துவிட்டது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் எங்களால் அறிவுரை குழுமத்திடம் முறையிட முடியவில்லை. தமிழில் வழங்கப்பட்ட ஆவணங்களில் தவறாக குறிப்பிட்டதால் மேல் நடவடிக்கைக்கான எங்களது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், “மனுதாரர் கணவரை காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆவணத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் கொடுத்துள்ளனர். சரியான தமிழில் மொழிபெயர்ப்பு செய்யாமல் ஆவணங்களை வழங்கியுள்ளனர். மாநில அறிவுரை குழுமம் என்பதற்கு பதில் மாநில ஆலோசனை குழு என குறிப்பிட்டுள்ளனர். இதனால், கருணை மனு திரும்பி வந்துள்ளது. இதுபோன்ற மனுக்களை பரிசீலிப்பதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அலட்சியப் போக்கு மற்றும் அக்கறையற்ற மனப்பான்மையை கருத்தில் கொள்ளக்கூடாது. விவரிக்க முடியாத தாமதம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் மீறலாகும். இதுபோன்ற நிலையில் தடுப்புக் காவல் நிலையை அனுமதிக்க முடியாது.

ஏனெனில் இது சட்டவிரோதம் ஆகும். குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக் கூடியது. இதற்காக மனுதாரரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அவரது உரிமையை பறிக்க முடியாது. காபிபோசா சட்ட நடவடிக்கைக்கான ஆவணங்கள் 7 நாள் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் வைத்து ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய குறைந்தபட்ச பாதுகாப்பின் அடிப்படையில் மனுதாரர் கணவர் மீதான காபிபோசா சட்ட நடவடிக்கை ரத்துசெய்யப்படுகிறது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE