ராகுல் காந்தியின் பஞ்சாப் பயணம்!

By காமதேனு

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கு, ஒருநாள் பயணமாக இன்று செல்லும் ராகுல் காந்தி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 117 வேட்பாளர்களுடன் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.

காலை 9 மணிக்கு அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். பின்னர், 10 மணி அளவில் துர்கியானா கோயிலுக்கும், 11 மணிக்கு பகவான் வால்மீகி தீரத் தலத்துக்கும் சென்று வழிபடுவார். அனைத்து இடங்களுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களும் அவருடன் செல்கிறார்கள். தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமையைப் பறைசாற்றும் வகையில், இந்நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

பின்னர், சாலை வழியாக ஜலந்தர் செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள மிதாபூர் ஒயிட் டயமண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ‘புதிய சிந்தனை புதிய பஞ்சாப்’ எனும் காணொலிக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, நேரடியான பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், காணொலி மூலம் நடக்கும் இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரும் முன்னிறுத்தப்படவில்லை. தேர்தல் வெற்றிக்குப் பின்னர், முதல்வர் யார் என முடிவுசெய்யப்படும் பஞ்சாப் காங்கிரஸ் அறிவித்துவிட்டது. முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் ஆகியோர் இணைந்து தேர்தல் வெற்றிக்காக உழைப்பார்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.

ராகுல் காந்தியின் வருகை குறித்து ட்வீட் செய்திருக்கும் சித்து, “தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவர் ராகுல் காந்தி, ஜனவரி 27-ல் பஞ்சாபுக்கு வருகை தருகிறார். பஞ்சாப் காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் அவரது வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்” என அதில் குறிப்பிட்டிருக்கிறார். ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அடங்கிய பட்டியலையும் அதில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE