போடி: போடி-சென்னை ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி திமுக எம்பி-யான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இன்று போடி சென்ற அவருக்கு போஜன்பூங்கா அருகே பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய தங்கதமிழ்ச்செல்வன், “போடியில் இருந்து சென்னைக்கு தற்போது வாரம் மூன்று முறை மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. இதனை தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். திண்டுக்கல்-குமுளிக்கு புதிய ரயில்வழித்தடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
போடி நகர செயலாளர் புருசோத்தமன், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் லட்சுமணன், கவுன்சிலர் மகேஸ்வரன் உட்பட பலர் இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
» தேனியில் 2 டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு
» தேனியில் ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கிய உணவகம் @ உலக பட்டினி தினம்