மதுரை மாவட்டம். மேலூர் பகுதியில் பொங்கல் திருநாளன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் இடையே சாதி மோதல் ஏற்பட்டது. இயக்குநர் சேரனின் சொந்த ஊரான பழையூர்ப்பட்டியில், பொங்கல் விழாவில் திருமாவளவன் படத்தை வைத்து, பாடல்கள் போட்டதற்காக இளைஞர்கள் சிலரை ஊர் மந்தையில் கட்டிவைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. தட்டிக்கேட்டப் பெரியோரும் தாக்கப்பட்டார்கள். இதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநில துணை செயலாளர் தா.மாலின் கூறும்போது, “மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் சாதி வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலவளவு முருகேசன் கொலை தொடங்கி, ஆண்டுதோறும் சாதி ரீதியான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அங்கு தொடர்கின்றன. இந்த ஆண்டு பழையூர்பட்டி, உச்சரிச்சான்பட்டி, அலங்கம்பட்டியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்திருக்கிறது. அதற்கு காவல் துறையும் உடந்தையாக இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் சாதி வன்கொடுமை அதிகமுள்ள பகுதி என்று சிலர் உசிலம்பட்டியைச் சொல்கிறார்கள். உண்மையில் மேலூரில்தான் வன்கொடுமை அதிகம். அதுவும் காவல் நிலையத்துக்கே செல்லாமல், வெள்ளலூர் நாடு என்ற பெயரில் தனி அரசு நடத்தி, தனிச்சட்டத்தை பின்பற்றுகிறார்கள். புகார் கொடுத்த பட்டியலின மக்கள், விரைவிலேயே அந்தப் புகாரைத் திரும்பப்பெற வைக்கப்பட்டுவிடுகிறார்கள். இல்லையென்றால் அந்த ஊரிலேயே குடியிருக்க முடியாது. எனவே, மேலூர் பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறோம்” என்றார்.
இதற்கிடையே, வருகிற பிப்ரவரி 1-ம் தேதி, சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில், மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மேலூர் தாலுகாவை சாதிய வன்கொடுமைப் பகுதியாக அறிவித்திடு, சட்டம் ஒழுங்கு சமூக அமைதியை நிலைநாட்டி வெள்ளலூரில் தனிக் காவல்நிலையம் அமைத்திடு, பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு போடுகிற மேலூர் டிஎஸ்பியை பணிநீக்கம் செய்திடு, மேலூர் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் சாதிவெறி காவலர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்திடு, வெள்ளலூர் பகுதியில் நிலவும் நாடு, அம்பலம், தன்னரசு போன்ற பிரிவினைவாத, தேச விரோத கட்டமைப்பைத் தகர்த்து அரசமைப்புச் சட்ட ஆட்சியை உறுதி செய்திடு, வெள்ளலூர் சுற்றுவட்டார கிராமங்களில் நிலவும் மனித உரிமை மீறல், சாதிய பாகுபாடுகள், ஒடுக்குமுறை குறித்து கள ஆய்வு செய்திடு’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.