ராமேஸ்வரம்: விசைப்படகு மூழ்கியதில் இரு மீனவர்கள் உயிரிழப்பு; இருவர் மீட்பு

By கி.தனபாலன்

ராமேஸ்வரம்: மண்டபம் மீன்பிடி விசைப்படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர் இருவரின் உடலை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளில் படகு கடலில் மூழ்கி மீனவர் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு 12 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றுள்ளன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீன்பிடி அனுமதிச்சீட்டு பெறாமல் தடையை மீறி நேற்று மதியம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றது.

இப்படகில் பாம்பனைச் சேர்ந்த பரக்கத்துல்லா(42), கலீல் ரகுமான் (46), ஆரோக்கியம்(50), பிரசாத் (37), மண்டபத்தைச் சேர்ந்த முகமது ஹனீபா (60) ஆகிய 5 மீனவர்கள் சென்றனர். இவர்கள் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 4 மணியளவில் படகு பழுதாகி மூழ்கியது. அதானல் 5 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். இதில் பிரசாத், முஹமது ஹனிபா ஆகியோர் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் மண்டபம் கோவில்வாடி கடற்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

மற்ற மீனவர்களான பரகத்துல்லா, கலீல் ரகுமான், ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமாகினர். இவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர், மரைன் போலீஸார் மற்றும் மீனவர்கள் தேடி வந்தனர். அப்போது கடலில் மூழ்கி உயிரிழந்த ஆரோக்கியம், பரக்கத்துல்லா ஆகியோரின் உடல்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு மரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்களது உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான மற்றொரு மீனவர் கலீல் ரகுமானை தொடர்ந்து தேடி வருகின்றனர். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளில் படகு கடலில் மூழ்கி மீனவர் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE