தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்- அவமதித்த சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

By காமதேனு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவை மீறியதோடு, "நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, ஆளுநர் முதல் அதிகாரிகள் வரை உட்கார்ந்து இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் பின்னர் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், "தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் 73வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில், அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் வகையில் எழுந்து நிற்க மறுத்து தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். இது குறித்து அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதம் செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் உத்தரவை மீறி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டதோடு, தமிழ்த்தாய் பாடலை அவமதித்த செயல் பலரது கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE