ரௌத்திரம் மாறா ராகுல்: அமர் ஜவான் ஜோதியுடன் குடியரசு தின வாழ்த்து!

By காமதேனு

இந்தியா கேட்டிலிருந்து அகற்றப்பட்ட அமர் ஜவான் ஜோதியின் படத்தை வெளியிட்டு குடியரசு தின வாழ்த்தினை பகிர்ந்திருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி.

குடியரசு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் செய்தியில், ’1950 குடியரசு தினத்தன்று நமது தேசம் நம்பிக்கையுடன் சரியான பாதையில் தனது முதலடியை எடுத்து வைத்தது. உண்மையும் சமநிலையும் கொண்டிருந்த அந்த முதலடிக்கு வணக்கம்’ என்ற அரசியல் சதாய்ப்பு மிக்க வரிகளுடன் குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இந்த வாழ்த்துடன், டெல்லி இந்தியா கேட்டிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் அமர் ஜவான் ஜோதியின் படத்தையும் சேர்த்திருக்கிறார். இந்த வகையில் வாசகங்களிலும், படத்திலும் அரசியல் இடித்துரைப்புடன் குடியரசு தின வாழ்த்தினை பதிவு செய்திருந்தார் ராகுல் காந்தி.

இந்தியா கேட் பகுதியில் கடந்த 50 வருடங்களாக, அணையா விளக்காக சுடர்விட்டு வந்த அமர் ஜவான் ஜோதி, ஜன.21 அன்று அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தியா கேட்டிலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவக ஜோதியுடன், அமர் ஜவான் ஜோதி இணைக்கப்பட்டதாக அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியும் கோபாவேசமாய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

ராகுல் காந்தி

இந்தியா கேட் என்பது, முதல் உலகப்போரில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம். இதே இடத்தில், 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அமர் ஜவான் ஜோதி அமைக்கபட்டது. இந்தியா கேட் நினைவு சின்னத்தை, காலனியாதிக்கத்தின் அடையாளம் என பாஜக அரசு புறக்கணிக்கத் தொடங்கியது. மேலும் இந்திரா காந்தி ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டதால், அமர் ஜவான் ஜோதி மீதும் ஒவ்வாமை கொண்டது. ஆனால் வெளிக்காரணமாக, ’அங்குள்ள வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியல் முழுமையானதாக இல்லை’ என பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த இரண்டுக்கும் மாற்றாக, அங்கிருந்து சற்று தொலைவில் தேசிய போர் நினைவக ஜோதி நிர்மாணிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரமர் மோடியின் முன்மொழிவின் அடிப்படையில் அமைக்கபட்ட, இந்த தேசிய போர் நினைவகமே தற்போதைய மத்திய அரசின் விருப்பத்துக்குரிய வீர வணக்க நினைவிடமாக மாறிப்போனது. முக்கிய தேசிய தினங்களின்போது, அமர் ஜவான் ஜோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கு பதிலாக, அந்த நடைமுறையை தேசிய போர் நினைவகத்தில் முடித்துக்கொள்ள இறுதி செய்யப்பட்டது. இதற்கு தோதாக அமர் ஜவான் ஜோதியை, தேசிய போர் நினைவக ஜோதியுடன் இணைத்ததாகவும் அறிவித்தது.

தேசிய போர் நினைவக ஜோதியுடன் இணைக்கப்படும் அமர் ஜவான் ஜோதி

ஆனால், தங்களது ஆட்சி மற்றும் கட்சியின் வரலாற்று பின்புலம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி குமுறியது. அதனை மக்கள் நினைவுகளில் கிளறும் வகையில், ரௌத்திரம் மாறா ராகுல் காந்தியின் குடியரசு தின வாழ்த்தும் மேற்கண்டவாறு அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுவதுபோல அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவோ, அப்புறப்படுத்தப்படவோ இல்லை; அருகிலிருக்கும் இன்னொரு அணையா ஜோதியுடன் இணைக்கப்பட்டதே நடந்துள்ளது என பாஜக சார்பில் விளக்கம் தந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE