உள்ளாட்சித் தேர்தல் சர்ச்சை: வார்டு மறுவரையறையில் மீனவர்களுக்கு அநீதி?

By என்.சுவாமிநாதன்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் வார்டு மறுவரையில் மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும்முன்பு அரசு மீனவர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறும்பனை பெர்லின்

இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘1979 ஆம் ஆண்டுவரை கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் 23 கிராமப் பஞ்சாயத்துகளாக இருந்தது. அப்போது இருந்த மொத்த கடற்கரை கிராமங்களின் எண்ணிக்கை 35. இப்போது 48 கடற்கரை கிராமங்களில் வெறும் 8 கிராம பஞ்சாயத்துகள்தான் மீனவர்களுக்கென இருக்கின்றது. அப்படியானால் என்ன நடந்தது?

1980 பஞ்சாயத்து மறு சீரமைப்பின்போது 8 கிராமங்கள் மட்டும் கிராம பஞ்சாயத்தில் வைத்துவிட்டு மீதமுள்ள அத்தனை கடற்கரை கிராமங்களையும் உள்பகுதியிலுள்ள பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும் இணைத்து மீனவர்களின் பஞ்சாயத்துத் தலைவராகும் வாய்ப்பைப் பறித்துவிட்டனர். இதனால் வெறும் வார்டு உறுப்பினராக மட்டுமே மீனவர்கள் உருவாக முடிகிறது.

நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் வார்டு மறுவரையில் சமூக நீதியைக் கடைபிடித்தார்களா என்றால் அந்த வாய்ப்புகளையும் நயவஞ்சகமாக சூழ்ச்சி செய்து பறித்தார்கள். உதாரணமாக குளச்சல் நகராட்சியில் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 24. அதில் மீனவர்களின் வாக்குகள் மட்டுமே இருக்கும் வார்டுகள் 9. மீனவரல்லாத பிற சமூக மக்கள் மட்டுமே வாழும் ஏழாவது வார்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 414. ஆனால் மீனவ மக்கள் மட்டுமே உள்ள 23 வது வார்டில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 1630.

வெறும் 414 வாக்காளருக்கு ஒரு வார்டு என்றால் 1630 வாக்காளருக்கு 4 வார்டுகள் வரவேண்டுமல்லவா? குளச்சல் நகராட்சியில் உள்ள வாக்காளர்களில் மீனவர்கள் வசிக்கும் 9 வார்டுகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 10980.மீனவரல்லாத மற்ற சமூக மக்களைக் கொண்ட 15 வார்டுகளின் வாக்காளர் எண்ணிக்கை 11832. விகிதாச்சார அடிப்படையில் பார்த்தாலும் மீனவர்களுக்கு குறைந்தபட்சம் 15 வார்டுகளாவது வரவேண்டுமல்லவா?

பாலப்பள்ளம் பேரூராட்சியில் மீனவர்கள் வாழும் குறும்பனையில் உள்ள ஒரு வார்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1211. மீனவரல்லாத மற்ற சமூக மக்கள் வாழும் பகுதியில் ஒரு வார்டில் 349 வாக்காளர்களே உள்ளனர். நியாயமாகப் பார்த்தால்... குறும்பனையில் இருக்கும் ஒருவார்டு, நான்கு வார்டுகளாக மாற்றியிருக்க முடியுமல்லவா? பேரூராட்சிகளோடும், நகராட்சிகளோடும் இணைக்கப்பட்ட எல்லா கடற்கரை கிராமங்களிலும் இதே நிலைதான்.

மீனவர்கள் அரசியல் அதிகாரம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு செய்யப்படும் சதிதான் இதற்குள் இருக்கிறது. இந்த சூழ்ச்சியை எதிர்த்து நெய்தல் மக்கள் இயக்கமும், பெடா சார்பில் ஜார்ஜ் ஆன்றனியும், கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பும் கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். அடுத்து வரும் வார்டு மறுசீரமைப்பின்போது இதை முறைப்படுத்துவோம் என்று மீனவர் குறைதீர்ப்புக் கூட்டங்களில் ஒவ்வொரு ஆட்சியரும் உறுதிமொழி கொடுப்பார்கள். ஆனால் வார்டு மறுசீரமைப்பில் வரும் அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதித்துவத்தை இதனால் மீனவர்கள் இழந்து வருகிறோம்.’’என்கிறார் வேதனையுடன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE