“மதக் கலவரத்தைத் தூண்டும் அண்ணாமலையைக் கைது செய்ய வேண்டும்!”

By ரஜினி

“தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கைது செய்ய வேண்டும்” என சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜன.25) புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தேசிய தலைவர் சாம் ஏசுதாஸ், “தஞ்சாவூர் அருகே தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவியின் மரண வாக்குமூலம், சிறுமியின் பெயர் மற்றும் அவரது முகவரியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிவருகிறார். மதமாற்றம் தூண்டுதல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி, அதன்மூலம் மதகலவரத்தைத் தூண்டும் வகையில் அண்ணாமலை செயல்படுகிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை, நீதியரசர் வாக்குமூலம், போலீஸ் அறிக்கை என எதிலும் மதமாற்றம் என்ற வார்த்தை குறிப்பிடப்படாத நிலையில், பாஜக தலையீட்டால்தான் மதமாற்றம் என்ற பிரச்சினை எழுந்ததாகத் தெரிவித்தார்.

எனவே மாணவி மரணத்தை வைத்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டுவரும் அண்ணாமலையை உடனே கைது செய்ய வேண்டுமென்றும், மாணவியின் மரண வாக்குமூலத்தை வீடியோ எடுத்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE