“அல்வா கொடுத்த திமுக!” செல்லூர் ராஜூ கிண்டல்

By கே.எஸ்.கிருத்திக்

மொழிப்போர் தியாகிகள் நாளை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தமிழன்னை சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் ஈகியரின் படங்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்திய செல்லூர் ராஜூ, இந்தித் திணிப்பு எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். வெற்றி வாய்ப்பைப் பொறுத்த அளவில் மக்கள்தான் எஜமானர்கள். மக்கள்தான் நீதிமான்கள். இந்த அரசாங்கம் வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்வா கொடுக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது. அரசைக் கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்திருப்பதாகப் பத்திரிகைகளில் படித்தேன். அல்வா கொடுத்த அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், இதன் பிரதிபலிப்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் இருக்கும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் வைப்பதாக அரசு கூறுகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்த முறைகேட்டோடு தொடர்புடைய நிர்வாகிகள், அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் செல்லூர் ராஜூ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE