கடலூர் கலெக்டருக்கு கரோனா!- அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

By காமதேனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்கள் மற்றும் தன்னுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. தினந்தோறும் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 70,041 ஆக உயர்ந்துள்ளது. 314 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,929 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 399 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 882 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்துக்கு தொடர் காய்ச்சல் இருந்ததால் நேற்று காலை கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட மாவட்ட ஆட்சியர், தன்னுடைய அலுவலக ஊழியர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE