குடியரசு தினத்தையொட்டி காவல்துறையில் சிறந்த சேவையாற்றிய தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு 18 பேருக்கு மத்திய அரசு பதக்கம் அறிவித்துள்ளது. இதில் 2 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் 88 பேருக்கு, வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கம் 189 பேருக்கு, சிறந்த சேவை பணிக்கான காவல் விருது 662 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சென்னை டிராபிக் போலீஸ் ஏசிபி பிரதீப்குமார், தமிழ்நாடு கியூ பிரிவின் எஸ்.பி கண்ணம்மாள் உள்ளிட்ட 16 பேருக்கு மத்திய அரசு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை அதிகாரிகள் ஏ.டி.ஜி.பி.வெங்கடராமன், சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோர் ஜனாதிபதி பதக்கம் பெறுகின்றனர்.